விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் விழாவை முன்னிட்டு நாளை(09.01.2026) வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது. இதையடுத்து தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால் படம் தள்ளிபோவதாக தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. மேலும் புது ரிலீஸ் தேதி விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தது.
இதனிடையே சான்றிதழ் வழங்காதது தொடர்பாக சினிமா வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சினிமா வட்டாரத்தில் திரைத்துறை கஷ்டமான காலத்தில் இருப்பதாக விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டுகின்றனர். அந்த வகையில் இயக்குநர்கள் அஜய் ஞானமுத்து, ரத்ன குமார், கார்த்திக் சுப்புராஜ் நடிகர்கள் சிபி சத்யராஜ், ரவி மோகன், சிம்பு உள்ளிட்ட பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். அரசியல் வட்டாரத்தில் மத்திய பா.ஜ.க அரசு தான் தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு காரணம் என காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டி விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிர கமிட்டி தங்களது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடியை டேக் செய்து விஜய்க்கு ஆதரவாக பதிவிட்டுள்ளது. அந்த பதிவில், “நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தைச் சுற்றியுள்ள சர்ச்சை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் குறித்த கவலைகளைத் தூண்டியுள்ளது. அரசியல் கருத்து வேறுபாடுகள் புரிந்துகொள்ளக்கூடியவை என்றாலும், ஒரு கலைஞனின் படைப்பை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
அரசியல் ஆதாயங்களுக்காகத் திரைப்படங்களுக்குத் தணிக்கை செய்வதைத் தமிழ்நாட்டு மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். கலையும், பொழுதுபோக்கும் அரசியல் போர்களில் காய்களாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அதிகாரிகளுக்கு நீங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக விஜய்-ன் திரைப்படம் தாமதங்களைச் சந்தித்து வருகிறது, இது தயாரிப்பாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அநீதியானது. கலையிலிருந்து அரசியலை விலக்கி வைப்போம், படைப்புச் சுதந்திரத்தை மதிப்போம். மோடி அவர்களே, நடிகர் விஜய்யை அல்ல, அரசியல்வாதி விஜய்யை எதிர்கொண்டு உங்கள் 56 அங்குல மார்பு என்ற கூற்றை நிரூபியுங்கள். உங்கள் மிரட்டல் அரசியல் தமிழ்நாட்டில் பலிக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/08/469-2026-01-08-16-24-13.jpg)