தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி நடக்கவுள்ளதாக சங்க உறுப்பினர்களான சீனிவாசன், ரஞ்சித் குமார் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தேர்தலை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி பி.தனபால் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது மனுதாரரின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தயாரிப்பாளர் சங்க தரப்பு, இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ளதாகவும் வழக்கு தொடர்ந்த 5 பேர்களில் 4 பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏற்கனவே தயாரிப்பாளர் சங்க தேர்தலை நடத்திய ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் தான் இந்த தேர்தல் நடக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி, தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடும்போது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காத நிலையில், தேர்தல் நடைமுறை துவங்கிய பிறகு தடை கோரி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
Follow Us