தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலமாக அறிமுகமானவர் டாப்ஸி. இப்படம் 2011 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் நடிகர், இயக்குநர் எனப் படத்தில் பணியாற்றிய பலருக்கும் பாராட்டுகளையும், தேசிய விருதுகளையும் பெற்றுத் தந்தது. இருந்த போதிலும், தனது இயல்பான நடிப்பின் மூலமாகத் தனிக் கவனம் பெற்றார் டாப்ஸி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இவர் பல தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமானார். குறிப்பாக, இவர் நடித்த ஆரம்பம் படம் வெற்றி படமாக அமைந்தது. மேலும், முனி 3 மற்றும் வந்தான் வென்றான் போன்ற பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

Advertisment

இவர் தனது திறமையின் மூலமாக இந்தியத் திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். அந்த வகையில் தற்போது, தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே, இவர் பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வரும் டாப்ஸி, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். 

Advertisment

அந்த நிகழ்ச்சியில், கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு டாப்ஸி பதிலளித்தார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர்களில் உங்களுக்குப் பிடித்தது யார்? என்று அவரிடம் கேட்கப்பட்டது. சற்றும் எதிர்பாராத இந்த கேள்விக்குப் பதிலளித்த டாப்ஸி, “நான் இந்தியாவில் இன்னும் வாழ விரும்புகிறேன்” என்று கூறி சிரித்தபடியே கடந்து சென்றுவிட்டார். டாப்ஸியின் இந்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.