சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் கருப்பு. இப்படத்தினை ஆர் ஜெ பாலாஜி இயக்கியுள்ளார். இப்படத்தில் திரிஷா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. டீசர் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, படம் எப்போது வெளியாகும்? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இருப்பினும் படம் வெளியாவது குறித்து எந்த வித தகவலும் இல்லாமல் இருந்தது. 

Advertisment

இந்த நிலையில், பல மாதங்களுக்குப் பிறகு இப்படம் குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, "ஒரு வாரத்திற்கு முன்பு கருப்பு படத்தினை பார்த்தேன். காத்திருப்பிற்குத் தகுதியான படம்" என்று பதிவிட்டிருந்தார்.  மேலும், இப்படத்தின் பின்னணி இசை சம்பந்தமான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

Advertisment

படத்தின் ஓடிடி தளம் மற்றும் சாட்டிலைட் உரிமம் குறித்த இழுபறிகளே படத்தின் வெளியீடு தேதி தள்ளிப்போவதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிம விவகாரங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. அதே நேரத்தில் படத்தின் கிராபிக்ஸ் பணிகளிலும் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது. இருப்பினும், தற்போது படத்தின் அனைத்து பணிகளும் சிறப்பாக நிறைவடைந்து, விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 

அதே நேரத்தில், தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருவது மற்றும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற காரணிகளையும் கருத்தில் கொண்டு தான் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Advertisment