மிதுன் பாலாஜி இயக்கத்தில் ஜேஎம் புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஸ்டீபன்’. இப்படத்தில் கோமதி சங்கர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தாராள பிரபு, கார்கி, லவ்வர் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவரை தவிர்த்து மைக்கல் தங்கதுரை மற்றும் ஸ்மிருதி வெங்கட் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisment

சைக்காலஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் கடந்த 5ஆம் தேதி நேரடியாக நெட்ஃபிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இப்படம் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு சூர்யா பாராட்டுத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ ஸ்டீபன் படத்தை பார்த்தேன். சிறப்பாக எழுதப்பட்ட திரைக்கதையில் கோமதி சங்கர் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். படம் முழுவதும் அதன் உணர்வு நிலை அப்படியே இருந்தது. மிதுன் பாலாஜி மற்றும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment

மேலும் அப்பதிவில் இன்னொரு குறும்படத்தையும் பாராட்டியுள்ளார் அவர் பதிவிட்டிருந்ததாவது “பேச்சு திரைப்படத்தை பார்த்தேன். ராஜா முத்துவின் நடிப்பு ஆழமான உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்திருந்தது. அபிஷேக் செல்வமணி, விஜய் சேதுபதி ப்ரொடக்ஷன், பிரியதர்ஷினி மற்றும் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படத்தை அபிலாஷ் செல்வமணி என்பவர் இயக்கியுள்ளார். ராஜமுத்து, ஜவகர் சக்தி, முருகவேல் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி தயாரித்துள்ள இப்படத்திற்கு சஞ்சய் என்பவர் இசையமைத்திருக்கிறார். இப்படம் நேற்று யூடியூபில் வெளியாகியிருந்தது.