ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். ஆனால் படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கவிருந்த ‘வாடிவாசல்’ படம் சில காரணங்களால் தள்ளிப் போகிறது. இதனையடுத்து மலையாள இயக்குநர் ஜீத்து மாதவனுடன் ஒரு படம் நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

Advertisment

இந்த நிலையில் வெங்கி அட்லூரி படம் குறித்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் இசையமைப்பாளர் ஒரு செய்தியாளர் சந்திப்பில், “இப்படம் ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. ரொம்ப அருமையாக வந்து கொண்டிருக்கிறது. ‘அலா வைகுண்டபுரம் லோ’ படம் போல் இருக்கும்” என்றார்.
‘அலா வைகுண்டபுரம் லோ’ திரைப்படம் அல்லு அர்ஜுன் நடிப்பில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 2020 ஆம் ஆண்டு வெளியானது. இதில் பூஜா ஹெக்டே நாயகியாகவும் ஜெயராம், நிவேதா பெத்துராஜ், முரளி ஷர்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். 

Advertisment

தமன் இசையமைத்திருந்த இப்படத்தில் ‘புட்ட பொம்மா’ பாடல் பெரும் வெற்றிபெற்றது. இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஹாரிகா & ஹாசினி கிரியேஷன் தயாரித்திருக்க குடும்ப பின்னணியில் ஆக்சன் டிராமாவாக உருவாகியிருந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.