தமிழ் சினிமாவில் நல்ல படங்களை தயாரிப்பதில் மிக முக்கிய நபராக அறியப்பட்டவர் சுரேஷ் காமாட்சி. சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற "மாநாடு" படத்தின் மூலம் நன்கு பிரபலமானவர் இவர். மேலும், "மிகமிக அவசரம்" எனும் சிறப்பான படத்தையும் தயாரித்துள்ளார். தற்சமயத்தில் அவர் தயாரித்துள்ள படம் "சல்லியர்கள்",ஈழப் போராட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமாகும். இப்படத்தினை கிட்டு இயக்கியுள்ளார். "வி ஹவுஸ் ப்ரொடக்சன்" தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப்படம் ஜனவரி 1 அன்று வெளியாக இருந்த நிலையில், திரையரங்கு கிடைக்காத காரணத்தினால் படம் வெளியாகவில்லை.
இது குறித்து சமூக வலைதளத்தில் படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி காட்டமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எமது வி ஹவுஸ் ப்ரொடக்ஷன் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள சல்லியர்கள் என்ற படத்தை ஜனவரி ஒன்று அன்று வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தோம் . ஆனால் தற்போது திரையரங்குகள் கிடைக்காதக் காரணத்தினால், படம் வெளியாகவில்லை. வெறும் 27 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தன. இன்றைய தினத்தில் சிறிய பட்ஜெட் படங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. வெறும் 27 தியேட்டர்களை வைத்துக்கொண்டு படத்தினை எப்படி வெளியிட முடியும். தற்சமயத்தில் எந்த ஒரு பெரிய படமும் வெளியாகவில்லை. திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழியவில்லை. இருந்தாலும் படத்தை வெளியிட திரையரங்குகள் கிடைக்க வில்லை. எங்கிருந்தோ வந்து எம்மக்களின் பணத்தை தின்று கொழுத்துவிட்டு, எங்களையே எப்படி புறக்கணிக்க முடிகிறது?, பெரிய படங்களுக்குக் கொடுக்கும் மரியாதையை சிறிய படங்களுக்கு தராததும் ஒரு வகை தீண்டாமை தான்.
இங்கிருக்கும் சங்கங்கள் சரியில்லை. அவர்களுக்குள் ஒற்றுமையில்லை. இதுவரை எத்தனை சிறிய பட்ஜெட் படங்கள் நசுக்கப்பட்டுள்ளது? முறைப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. காரணமற்ற காரியங்களில் கவனமாக இருக்கும் இவர்கள், ஏன் கார்பரேட்டை முறைப்படுத்தவில்லை? சிறிய படங்களை பிவிஆர் போன்ற திரையரங்குகளில் வெளியிட ஏன் திட்டம் தீட்டவில்லை. ஒன்றிணைந்து போராடாதவரை எதுவுமே நடக்க வாய்ப்பில்லை. இன்று சுரேஷ் காமாட்சிக்கு நடந்தது நாளைக்கு இன்னொரு தயாரிப்பாளருக்கு நடக்கலாம். ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்கள் நிறைய இருக்கிறார்கள்.ஒரு படம் ஓடாதுன்னு தீர்மானிக்க இவர்கள் யார்?! திரையரங்கு கொடு. படம் ஓடலைன்னா தூக்கு. பரவாயில்லை. ஆனால் முன்கூட்டியே தீர்மானிக்க அவர்கள் படம் பார்த்தார்களா? இல்லையே! அப்படியிருக்கும்போது ஏன் திரையரங்கு தர மறுக்கவேண்டும்? ஒரு ஈழத்தமிழ்ப் படம் ஓடக்கூடாது என்பதை எங்கிருந்தோ வந்த கார்ப்பரேட் தீர்மானிப்பது வெட்கக்கேடானது. பெரிய படங்களில் காசு சம்பாதித்துகொண்டு சிறிய படங்களை நசுக்குகிறார்கள். இப்படியே போனால் தமிழ் சினிமா மெல்லச் சாகும். ஏற்கெனவே செத்துப்போய்தான் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.
"இன்று நான் நாளை நீங்கள்". சல்லியர்கள் படம் OTT PLUS என்கிற தளத்தில் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள். ஒரு நல்ல படத்தைப் புறக்கணித்தவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக இதன் வெற்றி அமைய வேண்டும், எனவே மக்கள் அனைவரும் படத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதே பிரசாத் லேப் திரையரங்கில் இப்படம் வெற்றிப்படம் என்பதை அறிவிக்கும் விழா நடக்கும் என்ற உறுதி தருகிறேன். உலகத் தமிழர்களின் ஆதரவோடு... நன்றி!" எனப் பதிவிட்டுள்ளார்.
Follow Us