இந்தாண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொங்கல் வெளியீடான ‘பராசக்தி’ படம், கடந்த 10ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருந்த இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம். 

Advertisment

இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த மாணவர்களின் போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு நாளில் இப்படம் உலகளவில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சுதா கொங்கரா, சிவகார்த்திகேயன், ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Advertisment

நிகழ்வில் சுதா கொங்கரா பேசியதாவது, “என்னுடைய படக்குழு எனக்கு பொக்கிஷம். என்னுடைய துரோகி படத்தில் இருந்து அவர்கள் இருந்திருக்கிறார்கள். எனக்கு ஏதாவது வேண்டுமானால் நான் சொல்ல தேவையில்லை என்னுடைய கண்களை பார்த்து அவர்கள் புரிந்து கொள்வார்கள். அது எவ்வளவு பெரிய வசதி என்பது ஒரு இயக்குநராக இருந்தால் மட்டும் தான் புரியும். இந்த படத்தின் நடிகர்கள் என் இயக்கத்தில் முதல் முறையாக நடிப்பதால் சில பிரச்சனைகள் இருந்திருக்கலாம். முதல் ஷார்ட் காலை 7 மணிக்கு வைப்பேன். 

ஒருமுறை ஹோட்டலில் சிவகார்த்திகேயனும் அதர்வாவும் காலையில் மூன்றரை மணிக்கு ஓடினார்கள். அந்த அளவிற்கு அவர்களுக்கு டார்ச்சர் இருந்திருக்கிறது. ஆனால் அது ஐந்து நாட்களுக்குப் பிறகு சரியாகிவிட்டது. அதன் பிறகு டைமுக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். அப்படி வரவில்லை என்றால் என்ன நடக்கும் என்று அவர்களுக்கு தெரியும். சிவகார்த்திகேயனுடன் முதலில் சில நாட்கள் எனக்கு ஒத்துப் போகவே இல்லை. அவருக்கும் அதே போல்தான் இருந்தது. அதனால் இருவருமே அது குறித்து நைட்டு 8.30 மணி முதல் 12.30 மணி வரை பேசினோம். அதன் பிறகு பிரச்சனை எல்லாம் முடிந்து விட்டது. பின்பு அவருக்கும் எனக்கும் நல்ல புரிதல் வந்துவிட்டது. ஸ்ரீலீலா, பொறுத்தவரை அவரது நடனத்தை தான் எல்லோரும் இதுவரை பயன்படுத்தியிருந்தார்கள். ஆனால் இதில் அவருடைய நடிப்பை பயன்படுத்தியிருக்கிறோம். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அதேபோல் ரவிமோகன், அதர்வா, சேர்த்தன் என எல்லா நடிகர்களும் அவர்களது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். 

Advertisment

என்னை பாராட்டி ஊக்கம் கொடுத்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. நிறைய முறை நம்ம படம் வெற்றியா, தோல்வியா... சரியா போகுதா, இல்லையா... பிடிக்குதா, இல்லையா... இப்படி ஒரு குழப்பம் தோன்றும். அப்படி இருக்கும் போது பத்திரிக்கையாளர் ஷோ போனேன். உங்களுடைய பாராட்டும் அன்பும் தான் என்னை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.