டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். இப்படம் வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மூன்று நாட்கள் (19, 20, 21 டிசம்பர்) பராசக்தி உலகை கண்டுகளிக்கலாம் .
பராசக்தி படத்தின் இந்த உலகை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, வள்ளுவர் கோட்டம் அரங்கில், நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சுதா கொங்கரா, “ஒரு டைரக்டராக ஒவ்வொரு படம் இயக்கும் போதும் ஒவ்வொரு வாழ்வியலை வாழலாம். அந்த பாக்கியம் எல்லாருக்கும் கிடைக்காது. அந்த விஷயம் எனக்கு மிகவும் பிடிக்கும். இறுதிச்சுற்று படத்தில் ஒரு குத்துச்சண்டை உலகில் வாழ்ந்தது போல், பராசக்தி படத்தில் நம் வரலாற்றுக் காலத்தில் நுழைந்து பார்த்திருக்கிறோம்.
எனக்கு எல்லாமுமே இந்தப் படம் கொடுத்திருக்கிறது. அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை மிகவும் எளிமை. அதாவது சுதந்திரம் கிடைத்த 15 வருடம் கழித்து காசு மீது அவர்களுக்கு ஆசை குறைவு. அவர்களுக்குள் இருந்தது ஒரு நெருப்பு. அதாவது நம் உரிமைக்காக சண்டையிட வேண்டும். அந்த விஷயத்தை பேச வேண்டும் என நினைத்தேன். எனக்கு குடும்ப உறவுகள் மிகவும் பிடிக்கும். 60களில் ஒரு குடும்பம் எப்படி இருந்தது என்பதை காட்டியிருக்கிறோம். வரலாற்று உலகைத் திரும்பக் கொண்டு வர ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளோம். அந்த காலகட்டத்தை மீண்டும் உருவாக்கியுள்ளோம். 1960 காலகட்டத்தில் மீண்டும் வாழ்ந்து விட்டு வந்தது போல் இருக்கிறது. கண்டிப்பாக அனைவருக்கும் இப்படம் பிடிக்கும்” என்றார்.
Follow Us