டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். இப்படம் வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஆனால் 10ஆம் தேதியே முன்கூட்டியே வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 19ஆம் தேதி முதல் இக்கண்காட்சி நடைபெறுகிறது.
இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா இக்கண்காட்ச்சியை பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “குழந்தைகள் முதல் குடும்பங்கள் வரை ஏராளமான பேர் வருகிறார்கள். வரிசையில் நின்று பார்க்கிறார்கள். இதை பார்க்கும் போது என் மனதுக்கு நிறைவாக இருக்கிறது. முதலில் இரண்டு நாள் தான் இந்த கண்காட்சியை திட்டமிட்டு இருந்தோம். ஆனால் மக்களின் வரவேற்பால் இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்துள்ளோம். மற்ற ஊர்களுக்கும் இதை கொண்டு போக திட்டமிட்டுள்ளோம். இந்த கண்காட்சி படத்துக்கு ஒரு அறிமுகம். இப்படம் 60களில் நடப்பதால் இப்போது இருக்கும் ஜென்-சி தலைமுறைக்கு அது பற்றி தெரியாது. அவர்களுக்கும் தெரிய வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு” என்றார்.
பின்பு அவரிடம் பெண் இயக்குநர்களின் வளர்ச்சி தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ஆண் பெண் என்பதை தாண்டி இயக்குநரை இயக்குநராக மட்டும் பார்க்க வேண்டும். நான் இப்போது பெரிய படம் எடுக்கிறேன். இன்னும் பலர் அப்படி எடுக்கிறார்கள். இனிமேல் எங்களை ஒரு இயக்குநராக மட்டும் தான் பார்ப்பார்கள் என்று ஆசைப்படுகிறேன். அதுதான் நடக்க வேண்டும். அந்த சூழல் தற்போது வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அப்படி வரவில்லை என்றால் அதை நோக்கி நாம் நகர வேண்டும். பெண் இயக்குநர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். அதற்காக சில தடைகளும் இருக்கிறது. அதை உடைத்து முன்னேற வேண்டும்.
ஆண் இயக்குநர் பெண் இயக்குநர் என்பது இப்போது இல்லை. அப்படி இருந்திருந்தால் பெரிய ஹீரோக்கள் என்னை அணுகியிருக்க மாட்டார்கள். எல்லா மொழிகளிலிருந்தும் பெரிய ஹீரோக்கள் என்னை அழைக்கிறார்கள். பெண்கள் என்றால் சிறிய பட்ஜெட்டில் படம் எடுப்பார்கள், கமர்ஷியலாக எடுக்கத் தெரியாது என்பது இப்போது இல்லை. எல்லாம் மாறிவிட்டது. பெண்களுக்காக சமூகத்தில் ஒரு முன்னேற்றம் நடக்கிறது. இதுதான் ஒரு பெரிய சாதனை” என்றார்.
பின்பு சிவாஜி கணேசனின் பராசக்தி படம் தொடர்பான கேள்விக்கு, “ஒரு அரசியல் பார்வையை தாண்டி அது ஒரு எமோஷனான படம். அண்ணன் தங்கச்சி பாசத்தை பேசிய படம். அதேபோல் அண்ணன் தம்பி பாசத்தை பற்றிய கதை இந்தப்படம். சமூகத்தில் நடப்பது இவர்களுக்கு எந்த விதத்தில் பாதித்தது என்பது தான் கதை” என்றார்.
Follow Us