ஆதித்யா சோப்ரா இயக்கத்தில் ஷாருக்கான், கஜோல் நடிப்பில் 1995 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே’. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜட்டின் - லலித் என இரு இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தனர். மியூசிக்கல் ரோமன்ஸ் ஜானரில் வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட இந்தியாவிலேயே அதிக நாட்கள் ஓடி வரலாற்று சாதனை படைத்தது. மும்பையில் ஒரு திரையரங்கில் கடந்த அக்டோபர் மாதம் வரை இப்படம் ஓடியதாக கூறப்படுகிறது. 

Advertisment

இந்த நிலையில் இப்படம் 30 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக லண்டனில் லெய்ஷ்சர் சதுக்கத்தில் ஷாருக்கான் மற்றும் கஜோலின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வெண்கலத்தில் உருவான இச்சிலையை ஷாருக்கான் மற்றும் கஜோல் திறந்து வைத்தனர். இதன் மூலம் முதல் முறையாக ஒரு இந்தியப் படம் அங்கு இடம்பெற்றுள்ளது. முன்னதாக ஹாலிவுட் படங்களான ஹாரி பாட்டர், மிஸ்டர் பீன், பேட்மேன் உள்ளிட்ட சில படங்கள் இடம்பெற்றிருக்கிறது. 

Advertisment

திறப்பு விழாவில் ஷாருக்கான் பேசுகையில், “இப்படம் தூய்மையான இதயத்தோடு உருவாக்கப்பட்டது. காதல் பற்றி நாங்கள் சொல்ல விரும்பினோம். அந்த காதல் எப்படி தடைகளை தகர்க்கும், அது இருந்தால் உலகம் எப்படி சிறந்த இடமாக இருக்கும் என்பதை காட்டியதால் தான் இந்த படம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட முறையில் இந்த படம் எனது அடையாளத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் படம் வெளியானதிலிருந்து நானும் கஜோலும் நிறைய அன்பை பெற்று வருகிறோம்” என்றார். 

பின்பு கஜோல் பேசுகையில், “இந்த படம் 30 ஆண்டுகளை கடந்தும் தொடர்ச்சியாக அன்பை பெறுவதைப் பார்க்கும்போது நம்ப முடியவில்லை. லண்டனில் சிலை திறக்கப்படுவதை பார்க்கும் போது நமது வரலாற்றின் ஒரு பகுதியை மீண்டும் நினைவு கூறுவது போல் உணர்கிறேன். இது உண்மையிலேயே தலைமுறைகளை கடந்து பயணித்த ஒரு கதை” என்றார்

Advertisment