தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீ லீலா. தமிழில் சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகியுள்ள பராசக்தி படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் அடுத்த மாதம் 14ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு வெளியாகிறது. இப்படத்தை அடுத்து அஜித்தின் அடுத்த படத்திலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அஜித்தை மலேசியாவில் கார் ரேஸ் டிராக்கில் சந்தித்து இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் வைரல் ஆனது. 

Advertisment

முன்னதாக சமூக வலைதளங்களில் இவரது ஏஐ புகைப்படங்கள் வைரலானது. இந்த நிலையில் அது குறித்து ஸ்ரீலீலா கவலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் என் இரு கைகளை கூப்பி, ஒவ்வொரு சமூக வலைதள பயனர்களையும் ஏஐ-யால் உருவாக்கப்பட்ட முட்டாள்தனத்தை ஆதரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கும், அதைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு. தொழில்நுட்பம் முன்னேறுவது வாழ்க்கையை எளிதாக்குவதற்காகவே தவிர, சிக்கலாக்குவதற்காக அல்ல.

Advertisment

ஒவ்வொரு பெண்ணும், கலையைத் தங்களது தொழிலாக தேர்ந்தெடுத்திருந்தாலும், அவர்களும் ஒரு மகளோ, பேத்தியோ, சகோதரியோ, தோழியோ அல்லது சக ஊழியரோ தான். நாங்கள் ஒரு பாதுகாப்பான சூழலில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையுடன், மகிழ்ச்சியைப் பகிரும் ஒரு துறையின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறோம். எனது வேலைப்பளு காரணமாக ஆன்லைனில் நடக்கும் பல விஷயங்களைப் பற்றி நான் அறியாமல் இருந்தேன். இதை கவனத்திற்குக் கொண்டு வந்த என்னுடைய நலம் விரும்பிகளுக்கு நன்றி. நான் எப்போதும் என் சொந்த உலகில் வாழ்ந்து வருகிறேன், ஆனால் இது மிகவும் வருத்தமளிப்பதாகவும் பேரழிவை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எனது சக ஊழியர்களும் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொள்வதைக் காண்கிறேன், மேலும் அனைவரின் சார்பாகவும் நான் இதைத் தெரிவிக்கிறேன்.

அன்புடனும் கண்ணியத்துடனும், என் பார்வையாளர்களின் மீதுள்ள நம்பிக்கையுடனும், தயவுசெய்து எங்களுக்கு ஆதரவாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் அதிகாரிகள் இந்த விஷயத்தைக் கவனித்துக்கொள்வார்கள்” என்றுள்ளார். 

Advertisment