Advertisment

வெடித்த விவகாரம்; கௌரி கிஷனுக்கு ஆதரவாக களமிறங்கிய சங்கங்கள்

06 (5)

96 படம் மூலம் பிரபலமான கௌரி ஜி கிஷன், புதிதாக நடித்துள்ள படம் ‘அதர்ஸ்’. இப்படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று திரையிடப்பட்ட நிலையில் பின்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு யூடியூருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னதாக அந்த யூடியூபர், படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது கௌரி கிருஷ்னின் எடை குறித்து அநாகரிகமான முறையில் பட நாயகினிடம் கேள்வி கேட்டிருந்தார். 

Advertisment

இந்தக் கேள்வியால் பாதித்துள்ள கௌரி கிஷன் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் அந்த யூடியூபரை பார்த்து, “நீங்க அன்னைக்கு கேட்டது ரொம்ப அவமரியாதையான கேள்வி, அது ஜர்னலிசமே கிடையாது, ஏன் அப்படி கேள்வி கேட்டீங்க, என் எடைக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம், இதே ஒரு ஆம்பளைய பார்த்து இந்த கேள்விய கேப்பீங்களா, நீங்க கேட்டது உருவக்கேலி...” என அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்கினார். பதிலுக்கு அந்த நிருபரும் உங்ககிட்ட வேற என்ன கேட்க முடியும், குஷ்பு, சரிதா என அனைவரும் இந்த கேள்வியை எதிர்கொண்டவங்கதான் என வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். 

Advertisment

இந்த நிலையில் அநாகரீகமாக கேள்வி கேட்ட அந்த யூடியூபரை கௌரி கிஷன் அதிரடியாக கேள்வி கேட்டது பலரது பாராட்டை பெற்றுள்ளது. கௌரி கிஷனுக்கு ஆதரவாக பா.ரஞ்சித், குஷ்பு, கவின், அஞ்சு குரியன் திரைப்பிரபலங்கள் பலரும் எக்ஸ் பக்கம் வாயிலாக பதிவிட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க தற்போது தென்னிந்திய நடிகர் சங்கமும் சென்னை பத்திரிகையாளர் மன்றமும் கௌரி கிஷனுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “நேற்று நிகழ்ந்த இந்த நிகழ்வு மிகவும் விரும்பத் தகாதது. பத்திரிகையாளர் சந்திப்புகளில் ஒரு சில வக்கிரமான நபர்கள் பத்திரிக்கையாளர்கள் போர்வையில் நடிகைகளை பார்த்து ஏளனமாக கேள்வி கேட்பதும் அவமானப்படுத்துவது கவலை அளிக்கிறது. நேற்று எங்களது சகோதரி ஒருவருக்கு நிகழ்ந்த நிகழ்வு அதே நபரால் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இன்னொரு சகோதரிக்கும் நிகழ்ந்தது. இன்றைய சூழலில் செல்போன் இருந்தால் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்து பத்திரிக்கையாளர் ஆகிவிடலாம், திரைத்துறையினர் பற்றி அவதூறுகளை ஆபாசமாக பரப்பி பார்வையாளர்களை பெற்று விடலாம் என்ற மோசமான நிலை நிலவுகிறது. 

இந்த சூழலில் எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பத்திரிக்கை துறையில் இது போன்ற களைகள் முளைத்திருப்பது நாம் அனைவரும் ஒன்று கூடி பேசி சரியான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று எங்கள் சகோதரிக்கு நடந்த சம்பவத்தை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இனி எதிர்காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கலந்து ஆலோசிக்க தேவையான முன்னெடுப்புகளை தொடங்குவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பத்திரிக்கையாளர் மன்றம் வெளியிட்ட அறிக்கையில், “கெளரி கிஷனின் உடல் எடை குறித்து கேள்வி கேட்ட யூடியூபரின் செயல்பாட்டை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது. திரைப்படம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பில் அத் திரைப்படத்தில் பங்களிப்பு செய்த பெண் கலைஞரின் உடல் எடை கேலிக்கு உள்ளாக்கும் நோக்கத்தோடு, கேள்வி கேட்பது அநாகரீகமானது, அருவருக்கத்தக்கது. குறிப்பாக இக்கேள்விக்கு திரை கலைஞர் கௌரி கிஷன் தனது எதிர்ப்பை தெரிவித்த பிறகும் உடல் எடை குறித்து கேள்வியை நியாயப்படுத்தி பெண் திரைக் கலைஞரை நோக்கி கடினமான குரலில் எதிர் விவாதம் நடத்திய யூடியூபரின் செயல்பாடுகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிப்பதோடு இதுபோன்று அருவருக்கத்தக்க ஆணாதிக்க மொழியில் செயல்படுகிறவர்களை சக பத்திரிகையாளர்கள் கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்த விரும்புகிறது.

மேலும் பத்திரிகையாளர் சந்திப்பில், கூட்டாக பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் திரை கலைஞர் கௌரி கிஷன் தனது கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைத்த செயல்பாடுகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே மலையாள நடிகர் சங்கமான அம்மா அமைப்பும் கௌரி கிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அச்சங்கம் தெரிவிக்கையில், “கௌரியின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது. எவர் செய்தாலும் எப்போது எங்கே செய்தாலும் பாடி ஷேமிங் தவறானது, என்ற நம்பிக்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உடல் அவமதிப்பு ஒரு மனிதரின் மனநிலையை பாதிக்கும் செயல் என்பதால் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கடுமையாக கண்டிக்கிறோம். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளது.

chennai press club nadigar sangam, gowri g kishan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe