டூரிஸ்ட் ஃபேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘வித் லவ்’. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை அனஸ்வரா ராஜன் நடித்துள்ளார். இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் டூரிஸ்ட் பேமிலி பட தயாரிப்பாளர்களில் ஒருவரான மகேஷ் ராஜ் என்பவரும் இணைந்து தயாரித்துள்ளார். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படம் கடந்த 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் ரஜினிகாந்திடமும் படக்குழு பாராட்டு பெற்றது. ப்ரீமியர் காட்சியை ரஜினிகாந்த் பாராட்டினார். பின்பு படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டினார். இப்படம் மூன்று நாட்களில் ரூ.11 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் படத்தின் வெற்றியை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த், “ரொம்ப சந்தோஷமா இருக்கு. அப்பா எங்க படத்த தூக்கி வச்சுட்டாரு. போயஸ் கார்டன்ல இருக்குற வீட்டுக்கு நான் போனேன். அப்போ அம்மாவும் அப்பாவும் என்னை கட்டிப்பிடிச்சு சிரிச்சாங்க. அப்ப நான் அப்பாவை பார்த்து கேட்டேன், இதுதான் வெற்றியான்னு. அவர் சிரிச்சத நான் லைஃப்ல மறக்கவே மாட்டேன். நான் சினிமாவுல 18 வருஷமா இருக்கேன். ஆனா இப்பதான் முதல் வெற்றியை பார்க்குறேன். இந்தப் படம் என்னுடைய முதல் வெற்றி.
அபிஷன் என்னுடைய குழந்தை போல. அவருடைய சிரிப்பு ஆழ்மனசுல இருந்து வரும். அதை எப்போதும் அவர் வச்சுக்கணும். அனஸ்வரா நடிப்பை பார்த்து இவ்வளவு நாள் எங்க இருந்தீங்கன்னு அப்பா கேட்டாரு. அதேதான் எனக்கும் தோனுச்சு. இயக்குநர் மதனுக்கு வாழ்த்துக்கள். அவருடைய அடுத்த படத்தை தயாரிக்க நான் ரெடி. அவரும் ரெடின்னா ஆபீஸ் போட்டுடலாம். இந்தப் படத்துடைய வெற்றி எங்களுக்கு ஒரு பொறுப்பு.
மீடியாக்காரங்க எங்க அப்பாவுக்கும் குடும்பத்துக்கும் ரொம்ப சப்போர்ட் பண்ணியிருக்கீங்க. அதை திருப்பி சினிமாவுக்கு கொடுக்கணும். அதுக்கு ஒரு வாய்ப்பா இந்த படம் அமைஞ்சிருக்கு. நல்ல படங்கள் கொடுக்கதான் நான் சினிமாவில் இருக்கேன். எல்லாருக்குமே நன்றி. ஆனா நன்றி சொன்னா பத்தாது. எப்படி சொல்றதுன்னு தெரியல, அப்பா சொல்ற மாதிரி எங்களை வாழ வைத்த தெய்வங்கள் நீங்கதான். ரொம்ப நன்றி. அபிஷன், மதன் அறிமுகப்படுத்தின மாதிரி நிறைய இளம் திறமையாளர்களை நாங்க அறிமுகப்படுத்துவோம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/12/13-40-2026-02-12-16-33-27.jpg)