ரஜினியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாலான டிசம்பர் 12ஆம் தேதி அன்று ‘படையப்பா’ படம் ரீ ரிலீஸானது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து சிவாஜிகணேசன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா, மணிவன்னன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 1999ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வெற்றி பெற்று 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடியது.  

Advertisment

25 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் வெளியான நிலையில் இது தொடர்பாக ரஜினி, மனம் திறந்து ஒரு நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் அவர் கதை எழுதி தயாரித்தது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் ரீ ரிலிஸை கொண்டாடி வருகின்றனர். இதுவரை ரூ. 4 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Advertisment

இந்த சூழலில் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ரசிகர்களுடன் படம் பார்த்து மகிழ்ந்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன். 25 வருஷத்துக்கு பிறகு இந்த படத்தை இவ்வளோ கொண்டாடுறாங்க. அதே போல  25 வருஷம் முன்னாடி அப்பா எழுதின கதை, இப்போ புது படம் மாதிரி இருக்கு. 12ஆம் தேதியே நான் வந்துருக்கணும். ஆனா அப்பாவோட திருப்பதி போனதால வர முடியல. தியேட்டர்ல பாட்டு ஒன்ஸ்மோர் கேட்டு பாத்துருக்கேன். ஆனா ஒரு சீனை ஒன்ஸ்மோர் கேட்டு இப்பத்தான் பாக்குறேன். அது ஊஞ்சல் சீன். 

படையப்பா ஒரு எமோஷன். உங்களுடைய அன்புக்கு ரொம்ப நன்றி. திரும்ப வந்து படம் பாருங்க. நானும் வந்து பார்ப்பேன். நீங்க எல்லாரும் என்ஜாய் பண்ணுவீங்கன்னு நம்புறேன். ரசிகர்களின் ரெஸ்பான்ஸை பார்த்து அப்பாவும் சந்தோஷமா இருக்கார். அப்பாவுடைய இன்டர்வியூ பாத்திருப்பீங்க. அதுல அவர் பேசுனது எல்லாம் மனசுல இருந்து பேசினார்” என்றார். அவரிடம் ரஜினியை எப்போ நீங்க இயக்குவீங்கன்னு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவரை இன்டர்வியூ எடுத்ததே எனக்கு போதும். அதுவே ஒரு ஆசீர்வாதமா நினைக்கிறேன். படம் இயக்குவதை நேரம் காலம் கடவுள் முடிவு செய்யட்டும்” என்றார். பின்பு அவரிடம் ரஜினி - கமல் இணையும் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் அதற்கு இல்லை என பதிலளித்தார்.  

Advertisment