Advertisment

“நடிக்கும் போது என் மன உளைச்சலை கண்டுபிடித்த ஒரே மனிதர்...” - மனம் திறந்த சினேகா

18 (10)

இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று ரீ ரிலிஸாகிறது. 2004ஆம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து படக்குழுவினர் 'ஆட்டோகிராப் ரீயூனியன்' எனும் பெயரில் பிரத்யேக நிகழ்வை ஒருங்கிணைத்தனர். சென்னையில் நடைபெற்ற இந்த ரீயூனியன் நிகழ்வில் சேரன், சினேகா படக்குழுவினருடன் இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 

Advertisment

இந்நிகழ்வின் தொடக்கத்தில் படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சேரன் நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். 'ஆட்டோகிராப்' படத்தில் சேரனுடன் பணியாற்றிய உதவியாளர்கள் தங்களின் அனுபவங்களை கலகலப்புடன் பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில் சினேகா பேசுகையில், “இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோகிராபில் பணியாற்றிய கலைஞர்களை மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தப் படம் மீண்டும் வெளியாகிறது. இது நிச்சயம் வெற்றி பெறும். படத்தின் டிரைலரை பார்க்கும் போது புதிதாக இருந்தது. 

Advertisment

சேரனிடம் ஒரே ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்தக் கதை எழுதும்போது நீங்கள் எத்தனை காதல் தோல்விகளை சந்தித்தீர்கள்? என்பதை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அதற்கான பட்டியல் நிறைய இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப் படம் எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தது. இந்த படத்தில் பணியாற்றும் போது எனக்கு மன அழுத்தம், மன உளைச்சல் இருந்தது. அதை கண்டுபிடித்த ஒரே மனிதர் சேரன் தான். ஆட்டோகிராப் படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தோம். அப்போது நான் டிப்ரஷனில் இருந்தேன். அது யாருக்கும் தெரியாது. நான் அதற்கேற்ற வகையில் சிரித்துக் கொண்டே இருப்பேன். அப்போது ஒரு ஓரத்தில் உட்கார்ந்து இருந்தேன். அப்போது என் அருகே அமர்ந்து, உனக்கு என்ன பிரச்சனை என கேட்டார். நான் ஒன்றும் இல்லை என்று சொன்னேன். 

அப்போது உனக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று மட்டும் எனக்கு தெரிகிறது. ஆனால் அது சீக்கிரம் சரியாகும் என்று சொல்லி நட்பு பாராட்டினார். அன்று தொடங்கி 21 வருடங்களாக என்னுடைய சிறந்த நண்பராக அவர் இருக்கிறார். என்னுடைய சிறந்த நண்பர், நலம் விரும்பி யார் என்று கேட்டால் நான் மார்தட்டி சொல்வேன் சேரன் என்று. இந்தப் படம் பார்த்துவிட்டு என்னிடம் ஒரு ஆணும், பெண்ணும் நண்பர்களாக இருக்க முடியுமா என பலரும் கேட்டனர். அதை நாங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறோம். இந்தப் படம் அவருக்காக வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன். அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். படத்தின் வெளியீட்டிற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது எங்களுக்கு தெரியும். 

நான் நடித்ததில் எனக்கு பிடித்த படம் எது என்று கேட்டால் நிச்சயமாக ஆட்டோகிராப் என்று தான் பதில் அளிப்பேன். 'ஒவ்வொரு பூக்களுமே..' பாடலை படமாக்கும் போது எவ்வளவு எக்ஸ்ப்ரஷன்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த அனுபவமே எனக்கு போதுமானது. இந்த தலைமுறையினர் வித்தியாசமாக காதலை சொல்லி இருக்கிறார்கள். ஆனால் காதல் என்றால் இதுதான் என்று சொன்னவர், சொன்ன படம். ஆட்டோகிராப். இது வெற்றி பெறும்," என்றார். 

cheran sneha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe