தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் நிர்வகித்து வந்தவர் ஏவிஎம் சரவணன். ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை தயாரித்தவர். எப்போதும் கைகளைக் கட்டிக்கொண்டு பணிவுடனும் நட்போடும் பழகக்கூடியவர். இவர் இன்று காலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நேற்று தான் தனது 86வது பிறந்தநாளை கொண்டாடிய அவர் அடுத்த நாளே உயிரிழந்திருப்பது தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவரது உடல் ஏவிஎம் பொதுமக்கள் அஞ்சலிக்காகக் ஏ.வி.எம். ஸ்டுடியோவின் மூன்றாவது தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சிவக்குமார், ஏவிஎம் சரவணன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “73 வருஷத்தில் 175 படங்கள் எடுத்திருக்காங்க. இந்த ஸ்டூடியோவில் நடிக்காத நடிகர்களே கிடையாது. சிவாஜி, கமல் என ஏகப்பட்ட நடிகர்களை அறிமுகப்படுத்தினார்கள். அதேபோல் இசையமைப்பாளர்களில் சுதர்சன், மகாதேவன், எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான் என எல்லாருமே இந்த நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளனர். டைரக்டர்களில் கே எஸ் கோபால், ஏபி நாகராஜ், ஸ்ரீதர்... இந்த மூன்று பேரை தவிர்த்து பாரதிராஜா, பாக்யராஜ் உட்பட அனைத்து டைரக்டர்களும் இதில் வேலை பார்த்துள்ளனர்.
இந்த நிறுவனம்தான் 1965ல் என்னை அறிமுகப்படுத்தியது. என்னுடைய சொந்த பெயர் பழனிசாமி, இந்த பெயரை சிவக்குமார் என மாற்றி வைத்தது சரவணன் சார் தான். அவருடைய ஞாபகமாகத்தான் சூர்யாவுக்கு சரவணன் என பெயர் வைத்தேன். முதல் படத்தில் நான் நடித்த காதல் காட்சிகள் எடிட்டில் தூக்கப்பட்டது. அதனால் நான் பயங்கரமாக அழுது கொண்டிருந்தேன். அப்போது சரவணன் சார் வந்து, ‘சாரி சிவக்குமார் உன்கூட நடிச்ச பொண்ணுக்கும் உங்களுக்கும் மேட்ச் ஆகல, சீரியல் மாதிரி தெரிஞ்சுச்சு, அதனால அப்பச்சி எடிட்ல தூக்கிட்டார்னு’ சொல்லிட்டு சீக்கிரமே உங்களுக்கு மிகப்பெரிய வேஷம் கொடுப்போம்னு தைரியம் சொன்னார். அதே போல் 1968ல் அவர்கள் தயாரித்த உயர்ந்த மனிதன் எனும் படத்தில் சிவாஜியுடைய பையனாக நடிக்க வைத்தார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த 100 படங்களை எடுத்தால் அந்த படம் இருக்கும்.
அடுத்த தலைமுறையில் சூர்யாவுக்கு அயன், பேரழகன் என மாஸ்டர் பீஸ் படங்களை தயாரித்துள்ளனர். என்னுடைய முதல் பட சம்பளம் ஆயிரம் ரூபாய். ஆனால் சூர்யாவுக்கு அவர் கேட்கும் சம்பளத்தை கொடுப்பதாக சொன்னார்கள். தில்லோக்கும் அவரும் அவ்வளவு நெருக்கம். அவரிடம் தினமும் அரை மணி நேரம் பேசாமல் இருக்க மாட்டார். ஆனால் அவர் இறந்த பிறகு அவருக்கு ஒரு கை போனது போல் இருந்தது. அதன் பிறகு என்னுடன் தான் இரண்டு நாளுக்கு ஒருமுறை போன் பண்ணி பேசுவார். நான் மேடையில் பேசிய ராமாயண பேச்சுகளை சீடி வாங்கி பார்த்துவிட்டு என்னை பாராட்டுவார். கடைசி பத்து நாளில் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அதற்குள் இப்படியாகிவிட்டது” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/04/17-24-2025-12-04-16-30-39.jpg)