கத்துக்குட்டி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இரா. சரவணன். முதல் படத்திலேயே மீத்தேன் பிரச்சனை குறித்து பேசி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருந்தார். தென்மாவட்டங்களில் இருக்கும் அண்ணன் தங்கை உறவை அழகாகப் படம்பிடித்து தனது இரண்டாவது படமான உடன் பிறப்பே பலரும் ரசிக்கும்படி உருவாக்கியிருந்தார். மூன்றாவது படமான நந்தன் படத்தில் சமூகத்தில் இன்றுவரை கொடிய நோயாக இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஆதாரத்துடன் ஆவணப்படுத்தியிருந்தார்.

Advertisment

இந்தப் படம் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்ததோடு சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பெரும்பாலான படங்களில் பொறுப்புத் துறப்பு பக்கத்தில் ‘இந்தப் படத்தில் வரும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் அனைத்துமே கற்பனையானவை’ என்று குறிப்பிடப்படும். ஆனால், நந்தன் படத்தில் சமூகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகளை வெளிச்சம்போட்டுக் காட்டிய இயக்குநர் இரா. சரவணன், ‘இந்தப் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் உண்மையே, நம்பிக்கை இல்லாதவர்கள் என்னுடன் வாருங்கள். நான் உங்களுக்கு அந்த சம்பவங்களை நேரில் காட்டுகிறேன்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது பலரது கவனத்தை ஈர்த்தது. 

Advertisment

இதற்காகவே, தமிழ்சினிமாவின் உச்ச நடிகர் ரஜினிகாந்த் இவரைப் பாராட்டியிருந்தார். அதேபோன்று நடிகர் சிவகார்த்திகேயனும் நந்தன் படத்தை வெகுவாகப் பாராட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். பொதுவாக சிவகார்த்திகேயனுக்கும் இரா. சரவணனுக்கும் இடையே சினிமாவைத் தாண்டிய நட்பு இருக்கிறது. இரா. சரவணனின் கோரிக்கைகளை சிவகார்த்திகேயன் ஏற்று நிறைய உதவிகளை செய்திருக்கிறார். 

இந்த நிலையில் இரா. சரவணனின் பள்ளி ஆசிரியரும் அவரது ஆசானுமான இம்ரான் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனையறிந்த சிவகார்த்திகேயன் ஆசிரியர் இம்ரானை பாராட்டி ஆடியோ ஒன்றை இயக்குநர் இரா. சரவணனுக்கு அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில், இனி வரும் காலங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்று கூறியுள்ள அவர், வாய்ப்பு கிடைக்கும் போது ஆசிரியரை நேரில் சந்திப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். இதனை இயக்குநர் இரா.சரவணன் தனது சமூக வலைதளபக்கத்தில் பகிந்துள்ளார். ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கிய இம்ரானுக்கு சிவகார்த்திகேயன் அனுப்பிய வாழ்த்துச் செய்தி அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F904872752161783%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>