டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. 1960களின் வரலாற்றுப் பின்னணியில், ஒரு மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். இப்படம் வரும் 2026 பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. 

Advertisment

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இப்படத்தில் 60களின் காலகட்டத்தைக் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட கார்கள், ரயில், ரயில் நிலைய செட் மற்றும் அந்தக்கால அத்தியாவசிய பொருட்களை வைத்து, பராசக்தி பட உலகை செட் மூலம் உயிர்ப்பித்துள்ளனர் படக்குழுவினர். பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பராசக்தி பட உலகம் ஒரு கண்காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அடுத்த மூன்று நாட்கள் (19, 20, 21 டிசம்பர்) பராசக்தி உலகை கண்டுகளிக்கலாம் .

Advertisment

பராசக்தி படத்தின் இந்த உலகை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, வள்ளுவர் கோட்டம் அரங்கில், நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன், “சுதா மேம் 1960 களில் நடப்பதாகக் கதை அமைத்திருந்தார். அவர் தான் இந்தப்படம் பண்ணக்காரணம். இந்தப்படத்திற்காக 4,5 வருடம் அவர் உழைத்திருந்தார். அவர் சொன்னதைச் செய்தால் போதும். இந்தப்படம் செய்வது எல்லோருக்குமே கஷ்டம் தான். அதை எல்லோரும் ஏற்றுக்கொண்டு உழைத்துள்ளார்கள். சோதனையை சந்தித்தால் தான் சாதனை என ரஜினி சொல்வது போல் இந்தப் படம் ஒரு சாதனையாக இருக்கும். அதர்வாவிற்கும் எனக்கும் உள்ள நட்பு உண்மையான அண்ணன் தம்பி போலத்தான். அவர் முதல் படத்திற்கு புரமோசன் நிகழ்ச்சிக்கு அப்பாவுடன் வந்தார்,  நான் தான் ஹோஸ்ட் செய்தேன். இந்தப்படத்தில் சேர்ந்து நடித்திருப்பது மகிழ்ச்சி.

ஶ்ரீலீலாவை தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறேன். இங்கு பயங்கரமான நடிகராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. முயற்சி இருந்தால் மக்கள் நம்மை தூக்கி விடுவார்கள். அப்படி வந்தவன் தான் நான். அவருடன் நடித்தது நல்ல அனுபவம். அவருடன் கஷ்டமான டான்ஸ் மூவ்மெண்ட் தராததற்கு டான்ஸ் மாஸ்டருக்கு நன்றி. ரவி மோகன் சார் இந்தப்படத்திற்கு ஒத்துக்கொண்டது எனக்கு ஆச்சரியம். ஹீரோவாக கதை கேட்டுத் தேர்ந்தெடுப்பதே கஷ்டம். ஆனால் ஹீரோவாக ஹிட் படங்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் போது,  வில்லனாக ஒத்துக்கொள்வது மிகப்பெரிய விஷயம். அவர் எப்போதும் எனக்குக் கல்லூரியில் பார்த்த ஹீரோ தான். அவர் தான் எங்கள் செட்டில் மூத்தவர், அவர் பெயர் தான் முதலில் இருக்கும். அவரை அப்படித்தான் நாங்கள் பார்க்கிறோம்.

Advertisment

ஜீவி பற்றி  என் அம்மா சொன்னார்கள், அந்தப்பையன் சின்ன வயதிலிருந்து இசையமைக்கிறார் போல 100 படம் செய்துவிட்டார் என்றார். 100 படத்திலும் வித்தியாசமான ஜானர்கள் செய்து அசத்தியுள்ளார். இது 25 வது படமாக நடக்கக் காரணம் ஆகாஷ் தான். அவர் தான் இந்தப்படம் 25வதாக இருக்கட்டும் என்றார்.  இந்த மாதிரி ஒரு டீம், இந்த மாதிரி ஒரு கதை, எனக்கு 25 வது படமாக கிடைத்தது என் வரம் தான். பராசக்தி அருள் தான் காரணம். பராசக்தி ஒரு முக்கியமான பிரச்சனையைப் பேசும் படம். காதல், பாசம், வீரம், புரட்சி என எல்லாத்தையும் பேசும் படமாக இருக்கும். அதோடு மாணவர்களுடைய பவரையும் இப்படம் பேசும். இந்த பொங்கலுக்கு நல்ல கொண்டாட்டமாக இருக்கும்” என்றார்.