சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘பராசக்தி’. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ரவி மோகன் நெகட்டிவ் ரோலில் நடித்து வர அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில் அவருக்கு 100வது படமாக இப்படம் அமைந்துள்ளது. இவரது இசையில் வெளியான ‘அடி அலையே...’, ‘ரத்னமாலா’ ஆகிய பாடல்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே யுவன் சங்கர் ராஜா குரலில் ஒரு பாடலை படக்குழுவினர் பதிவு செய்திருந்தனர். தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழு தொடங்கியது. ஸ்ரீ லீலா, ரவி மோகன், அதர்வா, சிவகார்த்திகேயன் ஆகியோர் தொடர்ந்து டப்பிங் பணிகளில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து படத்தின் மூன்றாவது பாடல் ‘நமக்கான காலம்’ என்ற பாடல் லிரிக்ஸ் வீடியோவுடன் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது அடுத்த பாடல் அப்டேட் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ளார். இப்பாடலை சிவகார்த்திகேயன் பாடியதாகவும் இது ஒரு புரட்சிகரமான பாடல் எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பாடலின் தலைப்பு ‘தரக்கு தரக்கு’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஜிவி பிரகாஷ் இசையில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். இதற்கு முன்னதாக இமான், அனிருத், என் ஆர் ரகுநந்தன், தீபு நினான் தாமஸ், ஹிப் ஹாப் தமிழா, சந்தோஷ் தயாநிதி, ஜிப்ரான், பிரிட்டோ மைக்கல், பரத் சங்கர் ஆகிய இசையமைப்பாளர்கள் இசையில் பாடியுள்ளார். கடைசியாக அவரது மாவீரன் படத்தில் ‘வண்ணாரப்பேட்டையில’ பாடலை பரத் சங்கர் இசையில் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/15/13-22-2025-12-15-19-46-20.jpg)