சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது. நடிப்பதை தாண்டி ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் இதுவரை கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான், குரங்கு பெடல், கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். மேலும் இந்தாண்டு வெளியான ‘ஹவுஸ் மேட்ஸ்’ படத்தை வழங்கியிருந்தார். 

Advertisment

இந்த நிலையில் அவர் புதிதாக வழங்கும் திரைப்படத்தின் அறிவிப்பு டீசருடன் வெளியாகியுள்ளது. படத்தை அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார். படத்தில் ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரோடு சிங்கம்புலி, அருள்தாஸ், பால சரவணன், முனீஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தை வழங்கியது மட்டுமில்லாமல் பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்தும் உள்ளார். 

Advertisment

டீசரை பார்க்கையில் ஒரு கிராமத்தில் வட்டி வியாபாரம் செய்யும் கிழவியாக ராதிகா சரத்குமார் வருகிறார். அவர் செய்யும் லூட்டிகளும் வட்டியை வசூலிக்கும் முறையும் நகைச்சுவையாக காட்டப்பட்டிருக்கிறது. பின்பு அவர் இறக்க வேண்டும் என ஊர் மக்கள் ஆசைப்படுவதாகவும் அது போல் அவர் இறந்து விட்டதாகவும் காட்டப்படுகிறது. ஆனால் ‘எமனையே எட்டி உதைச்சுபுட்டு எருமை மாட்டை புடிச்சு எந்திரிச்சு நின்னுக்கு வா... இவலாம் மயானத்துல சாம்பலா ஆனா தான் நம்ம எதுனாலும் சொல்ல முடியும்’ என்ற வசனம் இடம் பெற்று, ராதிகா இறந்தாரா இல்லையா என்ற சஸ்பென்ஸுடன் டீசர் முடிகிறது. கிராமத்து பின்னணியில் ஒரு கலகலப்பான படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி வெளியாகிறது.

 படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட சிவகார்த்திகேயன், தான் நம்பிய ஒரு கதை என்றும் தான் பெருமையுடன் வழங்கும் ஒரு திரைப்படம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ராதிகாவை இதற்கு முன் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Advertisment