சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம்.
இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. குறிப்பாக அனல் தெறிக்கும் வசனங்கள் பலரது கவனம் பெற்றது. மேலும் முன்னாள் முதல்வர் அண்ணா கதாபாத்திரம் தோன்றியது சிறப்பம்சமாக அமைந்தது. இதனால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாக, சான்றிதழ் கிடைக்காமல் கொஞ்சம் இழுபறி நீடித்தது. ஆனால் 25 திருத்தங்களுடன் யு/ஏ சான்றிதழ் பின்பு வழங்கப்பட்டது.
இப்படம் இன்று(10.01.2026) தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் ரவி மோகன், ஷாலினி அஜித்குமார், சிவகார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினர் என பிரபலங்களும் கண்டுகளித்தனர். இதில் சிவகார்த்திகேயன் திரையரங்கிற்கு செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, “படத்தின் முதல் ரிவ்யூ மதுரையில் இருந்து வந்திருக்கிறது. அதாவது அமரனை விட இது பெரியதாக இருக்கிறது என சொல்கின்றனர். இந்த படம் எல்லாருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு எடுக்கப்பட்டது. எல்லாருக்கும் பிடிக்கும் என நம்புக்றேன்.
ஒவ்வோரு படமும் மக்கள் ரசிப்பார்கள் என பார்த்து பார்த்து தான் பண்ணுவோம். அதே மாதிரி தான் இந்த படமும். ஆனால் உணர்வுரீதியாக எல்லாருடைய கதையாக இப்படம் இருப்பதால், என்னைப் போலவே அனைவருக்கும் இப்படம் ஸ்பெஷலாக இருக்கும். அதைத்தான் ரெஸ்பான்ஸாகவும் எதிர்பார்க்கிறேன்” என்றார். அவரிடம் சென்சாரில் அண்ணா பேசிய வசனங்கள் நீக்கப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “சென்சார் போர்டுக்கு என்று சில விதிமுறைகள் இருக்கிறது. அதில் இருக்கும் நபர்களுக்கும் சில கருத்துகள் இருக்கும். படத்தில் வரும் சில வார்த்தைகள் அவர்களுக்கு தவறாக இருக்கலாம்” என்றார்.
பின்பு படம் பார்த்து முடித்த பின்பும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எல்லாரும் ரொம்ப எமோஷ்னலாக இருக்கிறது என சொல்கிறார்கள். படம் எடுத்ததே எங்களுக்கு எமோஷ்னல் ஜர்னி தான். அது கதையிலும் இருக்கு, ஆடியன்ஸுக்கும் சென்றிருக்கு என சொல்லும் போது ரொம்ப சந்தோஷம். பொங்கல் ரிலீஸ் என்பது படக்குழு முன்னாடியே திட்டமிட்டது தான். நம்முடைய முன்னோர்கள், மொழிக்காக செய்த போராட்டத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு போகனும் என்பது தான் படத்துனுடைய முயற்சி” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/10/450-2026-01-10-16-05-17.jpg)