சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பராசக்தி’. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் 1960களில் ஒரு வரலாற்றுப் பின்னணியில் மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம். இப்படம் வரும் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. 

Advertisment

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு பேசுகையில், “பராசக்தி என்ற பெயர் எவ்வளவு பவர்ஃபுல்லாக இருக்கோ அது போலத்தான் படமும் இருக்கும். இது என்னுடைய 25வது படமாக அமைஞ்சது பெருமையான விஷயம். உங்க எல்லாரையும் 1960க்கு இந்த படம் டைம் ட்ராவல் பண்ணி கூட்டிட்டு போகும். மாணவர்களும் இளைஞர்களும் எப்போதுமே பவர்புல்லாக இருப்பார்கள். அதையும் இப்படம் சொல்லும். நிறைய பேர் இது அந்த மாதிரி படமா இருக்கும், இந்த மாதிரி படமா இருக்கும்னு சொல்றாங்க. அதை எதையுமே காதுல வாங்காதீங்க. இந்த படம் யாருக்கும் எதிரான படமோ யாரையும் தப்பா காட்டுற படமோ கிடையாது. இந்த மண்ணுக்காகவும் மொழிக்காகவும் உண்மையாக தியாகம் செஞ்சவங்களோட கதை. இன்னைக்கு நம்ம வாழ்றதுக்காக அன்னைக்கு போராடி உயிர் விட்டுட்டு போனவங்களோட கதை. அவங்களுக்கு ஒரு வணக்கம் செலுத்துற படமா இது இருக்கும். இன்னொரு பக்கம் பயங்கர இன்ஸ்பைரங்கிகாகவும் இருக்கும்” என்றார். 

Advertisment

தொடர்ந்து பட ரிலீஸ் குறித்து பேசுகையில், “இந்த படத்தை தீபாவளியில் அக்டோபரில் கொண்டு வரலாம் என தயாரிப்பாளர் சொன்னார். ஆனால் அப்போது விஜய் சாரின் படம்(ஜன நாயகன்) அறிவித்ததால் பொங்கலுக்கு கொண்டு வரலாம் என்றேன். ஆனால் கொஞ்ச நாள் கழித்து ஜன நாயகன் பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிப்பு வந்தது.  உடனே தயாரிப்பாளருக்கு கால் பண்ணி, ரிலீஸ் தேதியை மாற்ற முடியுமா எனக் கேட்டேன். அதில் இரண்டு சிக்கல் இருப்பதாக அவர் சொன்னார். ஒன்று எல்லா இன்வெஸ்டர்ஸிடமும் ஜனவரி ரிலீஸ் என்று தான் பேசியிருக்கோம். இன்னொன்று படத்தை தள்ளிப்போட்டால் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தான் பண்ண வேண்டும். அப்போது எலெக்சன் வருவதால் வேண்டாம் என சொன்னார். அது எனக்கு சரி என பட்டது. பணம் போடுகிறவர்கள் எடுக்கும் முடிவை ஒரு ஆர்டிஸ்டாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் இந்த ரிலீஸ் சரியாக இருக்க வேண்டும் என்று விஜய் சாரின் மேனேஜருக்கு ஃபோன் பன்னேன். 

இரண்டு படம் ஒரே சமயத்தில் வருகிறதே என்றேன். அதில் எந்த பிரச்சனையும் இல்லை, பத்து நாள் இருக்கிறது என்றார். அது எனக்கு ஓகே, ஆனால் விஜய் சாரின் கடைசி படம் என்கிறார்கள், அதுதான் எனக்கு கவலையாக இருக்கிறது என்றேன். அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என்றார். இருந்தாலும் விஜய் சாரிடம் சூழலை தெளிவாக சொல்லிடுங்கள், இல்லையென்றால் இதை வைத்து சிலர் காமெடி செய்வர்கள் என்றேன். உடனே அவர் விஜய் சாரிடம் பேசிவிட்டு லைனுக்கு வந்தார். எல்லாம் ஓகே, விஜய் சார் உங்களுக்கு வாழ்த்து சொன்னார் என்று சொன்னார். இது தான் நடந்தது. ஆனால் இதை வைத்து சிலர் வேறுமாதிரி பேசியிருந்தாங்க. அதில் சிலருக்கு வன்மம், சிலருக்கு வியாபாரம். அதனால் அவங்களை தொந்தரவு செய்யாமல் விட்டுவிடுவோம். கோட் படம் பார்த்துவிட்டு விஜய் சாருக்கு ஃபோன் பண்ணி படம் எண்டர்டெயினிங்காக இருந்தது என்றேன். தைங்ஸ் சொன்னார்.  எதுக்கு சார் தைங்ஸ்,  உங்களோட நடிச்சது எனக்கு ஸ்பெஷல் மொமெண்ட் சார் என சொன்னேன். நீங்க எவ்வளவு ஸ்வீட்டா பன்னிகொடுத்தீங்களோ அதுக்கு நான் எத்தனை முறை வேணாலும் தைங்க்ஸ் சொல்வேன் என்றார்.

Advertisment

இதுதான் எங்க இரண்டு பேருக்குள் இருக்கும் ரிலேஷன்ஷிப். இதுக்கு இடையில் யார் என்ன பேசுனாலும் என்னுடைய ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். ஜனவரி 9ஆம் தேதி எல்லாரும் ஜன நாயகன் படத்தை கொண்டாடுங்க. 33 வருஷம் நம்மை எண்டர்டெயின் பன்னவர் கடைசி படம் என சொல்லியிருக்கிறார், அதை நாம் கொண்டாட வேண்டும். அடுத்த நாள் பராசக்தி படத்தை கொண்டாடுங்க. இந்த பொங்கல் கோலிவுட்டுக்கு பிரமாதமாக இருக்கும். யார் என்ன வேணாலும் சொல்லட்டும் இந்த பொங்கல் அண்ணன் - தம்பி பொங்கல்” என்றார்.