வயது மூப்பு காரணமாகவும், மூச்சுத் திணறல் காரணமாகவும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (101) நேற்று(25-02-26) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தவெக தலைவர் விஜய், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, கனிமொழி எம்.பி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இயக்குநர் ரஞ்சித், கவிஞர் வைரமுத்து, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கம் வாயிலாகவும் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழக அரசியல் வரலாற்றிலேயே எளிமையும் நேர்மையும் இணைந்த ஒரு உயர்ந்த மனிதர் – தோழர் நல்லகண்ணு ஐயா. மக்களின் உரிமைக்காக வாழ்நாளை முழுவதும் அர்ப்பணித்த போராளி.பொதுமக்களின் குரலாகவும், உழைக்கும் சமூகத்தின் நம்பிக்கையாகவும் திகழ்ந்தவர். அரசியலில் எளிமையாக வாழ்வதும் சாத்தியமே என்று வாழ்ந்து காட்டியவர்.
தோழர் நல்லகண்ணு ஐயா அவர்களின் மறைவுமானுட சமூகத்தின் பேரிழப்பு. இத்தகைய மகத்தான மனிதரின்பால் எனக்கேற்பட்ட ஈர்ப்பின் காரணமாகவே நான் அடிக்கடி அவரை சந்தித்தேன், ஐயா வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்த்திருப்பதே பெரும்பேறு. இன்று அவர் நம்மோடு இல்லாவிட்டாலும் அவரது கொள்கைகளும் போராட்ட வரலாறும் என்றும் நம்மை வழிநடத்தும், நூற்றாண்டு கண்ட ஐயாவின் புகழ் இன்னும் பல நூற்றாண்டு நிலைத்திருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நல்லகண்ணு அய்யா நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் அவருக்கு என்ன பயன் என்பதை யோசிக்காமல் மக்களுக்கும் அவர் ஏற்றுக்கொண்ட கொள்கைக்கும் அதை சார்ந்தவர்களுக்கும் என்ன பயன் என்பதை மட்டுமே யோசித்து அதன்படியே வாழ்ந்திருக்கிறார். இப்படிப்பட்ட மாபெரும் ஒரு தலைவர் வாழ்ந்த காலகட்டத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்பதை பெருமையாக பார்க்கிறேன். அவர் மேல் எப்போதுமே ஒரு பெரிய ஈர்ப்பு உண்டு. ஏனென்றால் அவருடைய பயணம் அந்த மாதிரியானது.
சுதந்திரப் போராட்டத்தில் தொடங்கி அரசியலில் நம் நாட்டில் இருக்கும் அத்தனை பிரச்சினைகளிலும் குரல் கொடுத்தவர் அவர். அதில் தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்தவர். அவருடைய கடைசி மூச்சு வரைக்கும் போராடிய ஒரு தலைவர். அவருக்கு என் சார்பாகவும் என் குடும்பத்தின் சார்பாகவும் என்னுடைய ரசிகர்கள் எல்லார் சார்பாகவும் வீரவணக்கம். இன்றைக்கும் அவர் எல்லார் மனதிலும் உயர்ந்து நிற்பதற்கு இன்னும் ஒரு காரணமாக அவரது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானம் செய்ததுதான். இறந்த பிறகும் பயனுடைய ஒரு விஷயத்தை செய்து கொண்டு போயிருக்கிறார். அவர் ஒரு இன்ஸ்பைரிங்கான மனிதர். அவர் மறைந்தாலும் அவர் செய்த விஷயங்களையும் அவருடைய கொள்கைகளையும் மனதில் நினைத்துக் கொண்டு அனைவரும் இருப்போம். நானும் அப்படி இருக்க ஆசைப்படுகிறேன்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/26/19-77-2026-02-26-11-45-22.jpg)