‘டானாக்காரன்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் தமிழின் கதை வசனத்தில் அதே போன்று ஒரு போலீஸ் சம்பந்தப்பட்ட கதைக்களத்தை வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் சிறை. இதனாலேயே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இவரின் டானாக்காரன் படம் பெற்ற வரவேற்பை இந்த சிறையும் பெற்றுள்ளதா, இல்லையா?
வேலூரில் ஐந்தாண்டுகளாக விசாரணை கைதியாக சிறையில் இருக்கும் அக்ஷயை சிவகங்கை கோர்ட்டில் ஆஜர் படுத்த பஸ்ஸில் அழைத்து செல்கிறார் போலீஸ் ஏட்டு விக்ரம் பிரபு. இவர்கள் செல்லும் வழியில் அறிமுக நாயகன் அக்ஷய் பஸிலிருந்து தப்பி ஓடி விடுகிறார். அவரை விக்ரம் பிரபு அண்ட் டீம் வலைவீசி தேடுகின்றனர். இதைத் தொடர்ந்து விக்ரம் பிரபு அவரை கண்டுபிடித்தாரா, இல்லையா? கொலை குற்றவாளி அக்ஷய் தப்பிக்க காரணம் என்ன? அவருக்கு நீதி கிடைத்ததா, இல்லையா? என்பதே சிறை படத்தின் மீதி கதை.
திருச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்குநர் தமிழ் எழுதி அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியிருக்கிறார். வழக்கமான போலீஸ் கதையாக இல்லாமல் உண்மையில் போலீஸ் எப்படி இருப்பார்கள், அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாக எடுத்திருக்கிறார் இயக்குநர். அழுத்தம் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை மூலம் இந்த ஆண்டின் சிறப்பான ஒரு திரைப்படத்தை கொடுத்து, இப்படம் மூலம் இந்த வருடத்தையும் நிறைவாக முடித்து வைத்திருக்கிறார். ஒரு சிறிய கதையாக இருந்தாலும் அதை நேர்த்தியாக படம் பிடித்து எந்த ஒரு இடத்திலும் தொய்வில்லாமல் சிறப்பான முறையில் படத்தை உருவாக்கி பார்ப்பவர்களுக்கு அயற்சி ஏற்படாதவாறு படத்தை கரை சேர்த்திருக்கிறார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/26/02-2-2025-12-26-19-59-13.jpg)
ஒரு போலீஸுக்கு குறைந்தபட்ச அதிகாரம் என்று ஒரு வரம்பு இருக்கிறது. அதை சரியான விதத்தில் போலீஸார் பயன்படுத்தும் பட்சத்தில் நிரபராதிகள் தண்டிக்கப்படாமல் இருப்பார்கள் என்ற ஒற்றை வரி கதையை வைத்துக்கொண்டு உண்மை கதையை அதனுள் செலுத்தி சிறப்பான முறையில் திரைக்கதை அமைத்திருப்பது படத்திற்கு பெரிய பிளஸ். வழக்கமான போலீஸ் படமாக இல்லாமல் எதார்த்தமான உண்மைக்கு நெருக்கமான போலீஸ் படமாக இதை உருவாக்கியதற்கு வாழ்த்துக்கள். அந்த அணுகுமுறை படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகி பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறது. போலீஸில் இப்படிப்பட்ட நல்லவர்களும் இருப்பார்கள் என்ற விஷயத்தை சிறப்பாக காண்பித்து படத்தில் உள்ள சில குறைகளை மறைத்து வெற்றி படமாக மாறியிருக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி அழகாக நடித்திருக்கிறார் நடிகர் விக்ரம் பிரபு. இந்த மாதிரியான கதைக்களத்தை அவர் இனிவரும் காலங்களில் தேர்வு செய்யும் பட்சத்தில் அவருக்கான சிறப்பு இடம் தமிழ் சினிமாவில் காத்துக் கொண்டிருக்கிறது. போலீஸூக்கே உரித்தான மிடுக்கான தோற்றத்தில் சிறப்பான முறையில் நடித்து கவனம் பெற்று இருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அக்ஷய், அறிமுக நாயகனாக களம் இறங்கி அது தெரியாமலே மிக மிக சிறப்பாக நடித்திருக்கிறார். இதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல நடிகர் கிடைத்திருக்கிறார். எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு நடிப்பு தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து கவனம் பெற்று இருக்கிறார். இவருக்கு போட்டியாக படத்தின் நாயகி அனிஷ்மா சிறப்பாக நடித்திருக்கிறார். இவரும் புதுமுக நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிறுசிறு இடங்களில் அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
தேனப்பன் ஜட்ஜ் கதாபாத்திரத்தில் வந்து கவர்ந்திருக்கிறார். மற்றபடி உடனடித்த மற்ற அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை மிகச் சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரனின் இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு இசை தேவையோ அதை சிறப்பான முறையில் கொடுத்து ஒரு நல்ல படம் பார்த்த உணர்வை தன் இசை மூலம் கொடுத்திருக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் காட்சிகள் மிக மிக நேர்த்தி. இவரின் சிறப்பான ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
பொதுவாக போலீஸ் படம் என்றாலே அவர்களை உயர்வாக பேசி சூப்பர் போலீஸாக காண்பிப்பதே வழக்கமாக இருக்கும் காலகட்டத்தில் உண்மைக்கு மிக நெருக்கமான போலீஸ் கதைகளும் அவ்வப்போது வந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. குறிப்பாக போலீஸ் என்றாலே அவர்கள் செய்யும் தில்லுமுல்லுகள் இன்றைய காலகட்டத்தில் அதிகமாகி வருகிறது. அதை பல படங்களில் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இப்படி இருக்கும் சூழலில் போலீசில் சில நல்லவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் சின்ன சின்ன நல்லதுகள் கூட ஒருவரின் வாழ்க்கையை எந்த அளவுக்கு நல்லபடியாக மாற்றுகிறது என்பதை இந்த உண்மை கதை மூலம் படம் தெரிவித்து ஒரு நல்ல படம் பார்த்த உணர்வை இந்து சிறை நமக்கு கொடுத்து நம்மை சிறை பிடித்து இருக்கிறது.
சிறை - டச்சிங்!
Follow Us