பாலிவுட்டில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளவர் பலக் முச்சால். இந்தியை தவிர்த்து பெங்காலி, தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளிலும் பாடியுள்ளார். தமிழில் அனுஷ்கா நடித்த ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் ‘கண்ணாலம்’ பாடலை பாடியுள்ளார். மேலும் ‘எம் எஸ் தோனி - தி அன்டோட்ல்ட் ஸ்டோரி’ பட தமிழ் வெர்ஷனில் ‘உன்னால் உன்னால் உன் நினைவால்’ பாடலியும் பாடியுள்ளார்.
பாடுவதை தாண்டி ‘பலக் பலாஷ்’ என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மாநகரத்தை சார்ந்த இவர், சிறுவயதிலேயே ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற கனவோடு இருந்துள்ளார். அதற்கு காரணம் அவரது சிறுவயது சம்பவம் என சொல்கிறார்கள். அதாவது அவர் குழந்தையாக இருக்கும்போது ஒரு நாள் ரயில் பயணத்தில் ஆதரவற்ற குழந்தைகள் ரெயிலை சுத்தம் செய்வதை பார்த்துள்ளார். அப்போதிலிருந்தே அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றி பின்பு அறக்கட்டளையை உருவாக்கி அவர் நடத்தும் ஒவ்வொரு இசை நிகழ்ச்சிகளிலும் மற்றும் தனிப்பட்ட சேமிப்பு பணத்திலும் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில் தனது அறக்கட்டளையின் மூலம் இதுவரை 3, 800க்கும் அதிகமான ஏழை குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி அளித்துள்ளார். இந்த முயற்சி தற்போது சாதனைகள் அடங்கிய கின்னஸ் புத்தகத்திலும் லிம்கா புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. இதையடுத்து அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Follow Us