இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத மிக முக்கிய பின்னணி பாடகியாக இருந்து வந்தவர் ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம், போன்ற பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார். இவரது கணவர் ராம் பிரசாத் 1997ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, ஜானகி தனது மகன் முரளி கிருஷ்ணாவுடன் வாழ்ந்து வந்தார். முரளி கிருஷ்ணா பரதநாட்டிய கலைஞர் என்பதையும் தாண்டி தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
முரளிகிருஷ்னாவிற்கு திருமணமாகி அவருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இந்த நிலையில், 65 வயதான முரளிகிருஷ்னா நேற்று (22-01-26) மாரடைப்பால் காலமானார். இந்த சம்பவம் குடும்பத்தாரை மட்டுமின்றி திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு திரைப்பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இந்த சம்பவம் அறிந்து பெருந்துயரத்திற்கு ஆளான பாடகி சித்ரா இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எங்கள் அன்புக்குரிய ஜானகி அம்மாவின் ஒரே மகன், எங்கள் அன்பு சகோதரர் முரளி கிருஷ்ணா அண்ணன் மறைந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அவர் எங்களை விட்டு பிரிந்தது என்பது தாங்க முடியாத துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் மீள முடியாத துயரத்தில் ஆழ்ந்திருக்கும் ஜானகி அம்மாள் விரைவில் மீண்டு வர கடவுள் அவருக்கு மன வலிமையைத் தர வேண்டுகிறேன். அண்ணனின் ஆத்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி" என்று பதிவிட்டுள்ளார்.
Follow Us