தக் லைஃப் படத்திற்கு பிறகு சிம்பு, பார்க்கிங் பட டைரக்டர் ராம்குமார் பாலகிருஷ்ணன், தேசிங் பெரியசாமி இயக்கத்தில் 50வது படம், டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் என கமிட்டானார். இதில் பார்க்கிங் பட டைரக்டர் படம் பூஜை போட்டு படப்பிடிப்பு ரெடியானது. ஆனால் தொடங்கப்படவில்லை. இதற்கு படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் சிக்கியிருப்பது காரணமாக சொல்லப்பட்டது. இதனால் மீண்டும் மணிரத்னத்துடன் ஒரு படம் பண்ணவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தக் லைஃப் ரிசல்ட் பாதிப்பால் அந்த படம் கைவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சிம்பு யாரும் எதிர்பார்க்காத விதமாக வெற்றிமாறனுடம் கூட்டணி வைத்தார். இப்படத்தை தாணு தயாரிக்க வட சென்னை பட உலகை மையப்படுத்தி உருவாகிறது. படத்தின் அறிவிப்பு, ஒரு புரொமோவுடன் வெளியிட திட்டமிட்டு அதற்கான ஷூட் கடந்த ஜூலையில் சில தினங்கள் மட்டும் நடந்தது. இதில் இயக்குநர் நெல்சனும் இடம்பெற்றிருந்தார். இந்த அறிவிப்பு புரொமோ உடனடியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளி போய்கொண்டே இருந்தது. ஆனால் ஒரு சின்ன புரொமோவை கடந்த மாதம் 4ஆம் தேதியான வெற்றிமாறன் பிறந்தநாளில் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அறிவிப்பு புரொமோ கடந்த 4ஆம் தேதி வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டு பின்பு மீண்டும் தள்ளி போனது. ஆனால் விரைவில் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதனால் புது தேதி வெளியீடு குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்த சூழலில் இன்று காலை படத்தின் டைட்டில் வெளியானது. ‘அரசன்’ என வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிம்பு கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் சத்திய ஞான சபையில் வழிபாடு செய்துள்ளார். அப்போது ஒருவர் அவரிடம் வள்ளலாரை வழிபட வேண்டும் என்றால் சைவமாக இருக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு அவரிடம் சிரித்துக் கொண்டே பதிலளித்த சிம்பு, “சைவம் இல்லாம நான் இங்க வருவனா. நான் இங்க வந்ததே எல்லாருக்கும் சாப்பாடு போடனும்னு தான். இதுதான் என்னோட ஆசை. இதே மாதிரி 200 வருஷத்துக்கு முன்னாடி ஒருத்தர் ஆசைப்பட்டுக்காருன்னு கேள்விபட்டுத்தான் இங்க வந்தேன்” என்றார்.