வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணமாக முதல் முறையாக சிம்பு - வெற்றிமாறன் காம்போ, வட சென்னை பட உலகில் நடக்கும் கதை உள்ளிட்ட சில அம்சங்கள் இருக்கிறது. படத்தின் அறிவிப்பு புரொமோவுடன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஷூட் கடந்த ஜூலையில் சில தினங்கள் நடந்தது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக இயக்குநர் நெல்சனும் இடம்பெற்றிருந்தார்.
அந்த சில தினங்கள் நடந்த அறிவிப்பு புரொமோ உடனடியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் வெற்றிமாறன் படம் என்பதால் தாமதமாகி வந்தது. ஆனால் அதற்கு முன்னதாக ஒரு சின்ன புரொமோவை கடந்த மாதம் 4ஆம் தேதி வெற்றிமாறன் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் படத் தயாரிப்பாளர் தாணு வெளியிட்டிருந்தார். இதில் சிம்பு முகம் இடம்பெறவில்லை. இருப்பினும் வட சென்னை படத்தில் வரும் அந்த காலத்து கெட்டப்பில் சிம்பு தோன்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து அறிவிப்பு புரொமோ கடந்த 4ஆம் தேதி வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டு பின்பு மீண்டும் தள்ளி போனது. ஆனால் விரைவில் திரையரங்கிலும் சமூக வலைத்தளங்களிலும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதனால் புது தேதி வெளியீடு குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் படத்தின் டைட்டில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு ‘அரசன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டைட்டில் போஸ்டரில் சிம்பு, முன்பு வெளியான புரொமோ வீடியோவில் இடம்பெற்ற அதே கெட்டப்பில் ரத்தக்கரை படிந்த சட்டையுடன் கையில் பட்டாக்கத்தி வைத்துக்கொண்டு நிற்கிறார். இதிலும் அவரது முகம் தெளிவாக தெரியவில்லை. இந்த போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் தாணு, “ஆளப்பிறந்த அரசன், வெற்றியுடன் சிலம்பரசன்” எனப் பதிவிட்டுள்ளார்.
Follow Us