வெற்றிமாறன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தாணு தயாரிக்கும் இப்படம் வட சென்னை பட உலகை மையப்படுத்தி உருவாகிறது. இப்படத்தின் அறிவிப்பு, புரொமோ மூலம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான படப்பிடிப்பு கடந்த ஜூலையில் சில தினங்கள் மட்டும் நடந்தது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக இயக்குநர் நெல்சனும் இடம்பெற்றிருந்தார்.
இந்த புரொமோவின் சிறு முன்னோட்டம் கடந்த மாதம் 4ஆம் தேதி வெற்றிமாறன் பிறந்தநாளையொட்டி வெளியாகியிருந்தது. இதில் சிம்பு முகம் இடம்பெறவில்லை. இருப்பினும் வட சென்னை படத்தில் வரும் அந்த காலத்து கெட்டப்பில் சிம்பு தோன்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து அறிவிப்பு புரொமோ நேற்று திரையரங்கில் பிரத்யேகமாக வெளியானது. இதனைத் தொடர்ந்து தற்போது யூட்யூபில் புரொமோ வெளியாகிவுள்ளது.
ஆரம்பத்தில் நீதிமன்ற வளாகத்தில் ஒரு கேஸுக்காக ஆஜராக நிற்கும் சிம்பு, இயக்குநராக வரும் நெல்சனிடம் தன் கேஸ் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் சொல்வதாக சொல்கிறார். அதை வைத்து படமெடுப்பதற்காக அவரது கதையை கேட்கும் நெல்சன், சற்று தயக்கத்துடனே கேட்கிறார். பின்பு சிம்பு விசாரணைக்காக உள்ளே செல்ல நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு அவரது வழக்கறீஞர் சொல்லிக்கொடுத்தது போல் பதிலளிக்கிறார். அவர் மீது மூன்று பேரை கொலை செய்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அது உண்மையா என நீதிபதி கேட்க அது எல்லாம் பொய் என சிம்பு சொல்கிறார். அதற்கான காரணத்தையும் விவரிக்கிறார். அப்போது ‘அன்னைக்கு நைட்டு ஃபிரண்ட்ஸுங்களோட கேப்டன் பிரபாபகரன் படத்துக்கு போயிருந்தங்கம்மா...’ என அவர் சொல்ல, உடனே பிளாஷ்பேக்கில் அவர் கொலை செய்து விட்டு உடல் முழுக்க ரத்தக்கரையுடன் கையில் கத்தி வைத்துக்கொண்டு வரும் காட்சிகள் காட்டப்படுகிறது. பின்பு அவரை சிலர் சூழ்ந்துகொள்ள அவரை சிம்பு எதிர்கொள்ள தயாராகிறர். அத்துடன் புரோமோ முடிகிறது.
இடையில் சிம்பு நீதிமன்றத்தில் உள்ளே செல்லும் முன் நெல்சனிடம், ‘சார் நம்ம வேஷத்துல யாரை சார் நடிக்க வைக்கப்போறீங்கோ, தனுஷை நடிக்க வைங்க சார், பெர்ஃபாமன்ஸ் சூப்பரா பன்னுவாப்ல’ என சொல்லும் வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தெலுங்கில் இப்படம் ‘சாம்ராஜ்யம்’ என்ற தலைப்பில் இப்படம் வெளியாகிறது. அதன் புரொமோவும் வெளியாகியுள்ளது. இதனை ஜூனியர் என்.டி.ஆர் அவரது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், தமிழில் தனுஷ் வருவது போல் ‘ஜூனியர் என்.டி.ஆரை நடிக்க வைங்க சார்’ என்ற வசனம் இடம் பெற்றுள்ளது.