சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டீசல்’. எஸ்.பி.சினிமாஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ள இப்படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கிறது. இதில் இருந்து வெளியான ‘பீர்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு 17ஆம் தேதி வெளியாகிறது. இதனையொட்டி புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஹரிஷ் கல்யாண், படம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது சிம்பு தனக்கு பாராட்டு தெரிவித்ததாக தெரிவித்தார். அது குறித்து அவர் பேசியதாவது, “படத்தின் ட்ரெய்லர் பார்த்துட்டு சிம்பு அண்ணன் கால் பண்ணார். நிறைய விஷயம் பிடித்திருந்ததாக சொன்ன அவர், என்னுடைய பாடி லேங்குவேஜை பாராட்டினார். ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கு அந்த ஹீரோயிஸத்துக்கான மீட்டர் ரொம்ப முக்கியம், அதை அளவா கரெக்டா பண்ணிருக்கன்னு பாராட்டினார். அது பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது” என்றார். இப்படத்துடன் சேர்த்து துருவ் - மாரி செல்வராஜ் கூட்டணியின் ‘பைசன்’ மற்றும் பிரதீப் ரங்கநாதன் - அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் கூட்டணியின் ‘டியூட்’ படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.