தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இ - மெயில் மூலம் வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதுச்சேரியில் உள்ள துணை நிலை ஆளுநர் மாளிகை, புதுச்சேரி முதல்வர் இல்லம், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வீடு, சென்னை உயர்நீதிமன்ற வளாகம், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் உள்ள சுங்க தலைமை அலுவலகம், அண்ணா அறிவாலயத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
அதே போன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இல்லம், சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகை, பா.ஜ.க தலைமை அலுவலகம், நடிகைகள் திரிஷா, நயன்தாரா நடிகர் எஸ்.வி. சேகர், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் நடிகர் அருண் விஜய் உள்ளிட்டோர் இல்லத்திற்கும், சென்னையில் உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இலங்கை தூதரகத்திற்கும், ஐ.டி. நிறுவனங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதே சமயம் கரூர் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து நக்கீரன் அலுவலகம், தவெக தலைவர் விஜய்யின் வீடு, பிரபல தொலைக்காட்சி செய்தி நிறுவனம், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இன்று காவல்துறை தலைமையகத்தில் மின்னஞ்சல் ஒன்று வந்த நிலையில் அதில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அஜித்குமார் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அஜித் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இது ஒரு புறம் இருக்க மிரட்டல் தொடர்பாக நீலாங்கரை காவல் நிலைய போலீசாரும் விசாரித்து வருகின்றனர். இப்போது சோதனை முடிந்துள்ளது. அதில் வெடுகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/11/19-15-2025-11-11-16-04-23.jpg)