சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தினேஷ். பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் வெள்ளித்திரையில் ஜெய் - நஸ்ரியா நடித்த ‘திருமணம் எனும் நிக்காஹ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த நிலையில் இவர் மீது கருணாநிதி என்பவர் பண மோசடி புகார் கொடுத்துள்ளார். இவர் சினிமாவில் கேண்டீன் சப்ளையராக வேலை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் கொடுத்த புகாரில், “தனது மனைவி பிஎஸ்சி படித்துள்ளார். அவருக்கு வேலை தேடிக் கொண்டிருக்கும் சூழலில் பிக் பாஸ் புகழ் தினேஷை சந்தித்து வேலை குறித்து கேட்டேன். அதற்கு அவர் மின்வாரியத்தில் தனக்கு தெரிந்த ஆட்கள் இருப்பதாகவும் அங்கு வேலை வாங்கி தருவதாகவும் கூறி பத்து லட்சம் கேட்டார். நானும் முன்பணமாக மூன்று லட்சம் கொடுத்தேன். ஆனால் இதுவரை வேலை வாங்கித் தரவில்லை. முன்பணமும் திருப்பிக் கொடுக்கவில்லை.
கடந்த மாதம் 23ஆம் தேதி தினேஷும் அவரது தந்தையும் ராமநாதபுரம் வந்த போது அவரிடம் பணம் கேட்டேன். அதற்கு அவரும் அவரது தந்தையும் என்னை தாக்கியுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகாரின் அடிப்படையில் பணகுடி போலீசார் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக இன்று தினேஷிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தினேஷ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “புகார் கொடுத்த கருணாநிதி, யார் என்றே எனக்கு தெரியாது. மின்வாரியத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதில் வேலை வாங்கித் தர அளவுக்கு எனக்கு செல்வாக்கும் கிடையாது. அவர் கூறுவது அனைத்தும் பொய்.
வள்ளியூரில் ஒரு நபர் திரை பிரபலங்களிடம் பணம் பறிக்கும் நோக்கில் சில விஷயங்கள் செய்கிறார். நான் ஒரு கம்பெனி நடத்திக் கொண்டிருந்தேன். அதன் காசோலையை மேலாளர் முறையில்லாமல் தவறாக பயன்படுத்தினார். இது கொரோனா காலகட்டத்திற்கு முன்பாக நடந்தது. அது தொடர்பாக வள்ளியூர் நீதிமன்றத்தில் என் மேல் வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கை கடந்த நாலு வருஷமாக நேர்மையாக சந்தித்து வருகிறேன். இந்த வழக்கில் எதிராக இருப்பவர்கள் தான் இப்போது கருணாநிதி என்பவரை தூண்டிவிட்டுள்ளார்கள். சம்பவம் நடந்ததாக சொல்லும் தேதியில் புகார் கொடுத்த நபரை நானோ எனது அப்பாவோ சந்திக்கவேயில்லை. அதே போல் புகார் தொடர்பாக என்னை கைது செய்யவில்லை. விசாரணை மட்டும் நடத்தினர், அவ்வுளவு தான் ” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/13/11-10-2025-11-13-17-13-54.jpg)