நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் அர்ஜுன் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் ‘சீதா பயணம்’. இந்த முறை தன்மகள் ஐஸ்வர்யா அர்ஜுனனை வைத்து காதல் படமாக இத்திரைப்படத்தை உருவாக்கி இருக்கும் அர்ஜுனுக்கு இந்த படம் கை கொடுத்ததா, இல்லையா?

Advertisment

அப்பா சத்யராஜ் வளர்ப்பில் வளரும் ஐஸ்வர்யா அர்ஜுன், சமையல் கலை வல்லுநர் ஒர்க் ஷாப்புக்கு காரில் செல்கிறார். அவர் செல்லும் சமயத்தில் நாயகன் நிரஞ்சனை சந்திக்க, அவர் தன் ஊரில் இறக்கி விடும்படி ஐஸ்வர்யா அர்ஜுனிடம் லிப்ட் கேட்கிறார். ஐஸ்வர்யா அர்ஜுனும் அவரை கூட்டிக்கொண்டு செல்லும் வழியில் டீக்கடை, குழந்தைகள், பழக்கடைக்காரர் என பல்வேறு நபர்களை சந்திக்க நேர் இருக்கிறது. அவர்களுடன் பழகிவிட்டு நாயகன் நிரஞ்சனையும் அவர் ஊரில் இறக்கிவிட்டு, அவர் சமையல் கலை ஒர்க் ஷாப்புக்கு சென்று விடுகிறார். ஒர்க் ஷாப் அருகே செல்லும் பொழுது அந்த கட்டிடம் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு வெடித்து சிதறி விடுகிறது. ஐஸ்வர்யா அர்ஜுன் நூல் இழையில் உயிர் தப்புகிறார். தான் தாமதமாக அங்கு சென்றதால் தான் உயிர் தப்பினேன் என உணரும் ஐஸ்வர்யா அர்ஜுன், அந்த 20 நொடி தாமதத்திற்கு காரணமான நபர்களை சந்தித்து நன்றி சொல்வதற்காக ஒரு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதைத்தொடர்ந்து அந்த சீதா பயணம் ஆரம்பிக்கிறது. பயணம் ஆரம்பித்ததற்கு பிறகு என்ன ஆனது? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

Advertisment

இந்த காதலர் தினத்திற்கு வித்தியாசமான ஒரு காதல் கதையை உருவாக்கி அதை தனக்கு தெரிந்த வகையில் நேர்த்தியான முறையில் உருவாக்கி ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் அர்ஜுன். இந்தப் படத்தின் கதைக்களமும், கதை அமைப்பும் வித்தியாசமாகவே இருந்தாலும் காட்சி அமைப்புகளும் திரைக்கதையும் நாம் ஏற்கனவே பார்த்து பழகியது போல் இருப்பது சற்றே ஈர்ப்பு குறைவாக இருப்பது போல் தோன்றுகிறது. படத்தில் நடித்த கதை மாந்தர்கள், அனைவரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருப்பது சற்று ஆறுதல். அதேபோல் படம் ஆரம்பித்து சிறிது நேரத்திற்கு பிறகு வேகம் எடுக்கும் திரைப்படம் போகப்போக பல்வேறு வேகத்தடைகள் இடையே பயணித்து பின்பு இரண்டாம் பாதியில் நன்றி சொல்ல கிளம்பும் பயணத்தின் போது படம் சூடு பிடித்து வேகம் எடுத்து சிறப்பான முறையில் நகர்ந்து ஒரு நிறைவான காதல் படமாக முடிகிறது. இரண்டாம் பாதியில் வரும் திரைப்படம் ஓரளவு ரசிக்க வைத்திருக்கிறது. மற்றபடி நாம் ஏற்கனவே பார்த்து பழகிய கதைய அம்சம் கொண்ட படமாகவே இது இருப்பது இந்த கால ரசிகர்களை கவர தவறி இருக்கிறது. திரைக்கதையில் இன்னமும் கூட சுவாரசியத்தை கூட்டி இந்த காலத்திற்கு ஏற்றார் போல் ட்ரெண்டிங்காகவும் படத்தை கொடுத்திருந்தால் இந்த படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும்.

sita2

ஐஸ்வர்யா அர்ஜுன் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். தனக்கு என்ன வருமோ அதை சிறப்பான முறையில் கொடுத்து கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்திருக்கும் இவரின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது. நாயகன் நிரஞ்சன் தமிழுக்குப் புதியது. அதேபோன்று நடிப்பிலும் புதியதாகவே தெரிகிறார். படத்தில் பல இடங்களில் இவரது வசன உச்சரிப்பில் தெலுங்கு வாடை தெரிகிறது. குறிப்பாக இந்த படத்தை வேறு மொழியில் எடுத்து தமிழுக்கு மாற்றி இருப்பதும் இவரது நடிப்பில் நன்றாக தெரிகிறது. மற்றபடி உடன் நடித்த சத்யராஜ், கோவை சரளா ஆகியோர் அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இவரைப் போலவே பிரகாஷ்ராஜும் தனக்கு கொடுத்த வேலையை தன் அனுபவ நடிப்பின் மூலம் சிறப்பாகவே செய்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் வரும் அர்ஜுனும் சில காட்சிகள் வந்து கவருகிறார். மற்றபடி உடன் நடித்த அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை நிறைவாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.

Advertisment

ஜி பாலமுருகன் ஒளிப்பதிவில் பயணம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அனுப் ரூபன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை ஓகே. ஒரு காதல் படத்திற்கு எந்த அளவு இசையும் தேவையோ அதை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். காதலர் தினத்திற்கு ஏற்ற வித்தியாசமான காதல் கதையை தேர்ந்தெடுத்து இயக்கியிருக்கும் நடிகர் அர்ஜுன், திரைக்கதையிலும் அதே போன்று வித்தியாசமான காட்சி அமைப்புகள் கொடுத்து அதை சுவாரசியமாகவும் கொடுத்திருந்தால் இந்த படம் நிச்சயமாக சிறப்பாக அமைந்திருக்கும். காட்சிகளும் கதை அமைப்பும் ஏற்கனவே பார்த்து பழகிய அந்த கால ட்ரெண்டில் இருப்பது சற்றே மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.

சீதா பயணம் - ஸ்லோ அண்ட் ஸ்டடி!