கோவாவில் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய இந்திய சர்வதேச திரைப்பட விழா, நேற்றைய தினமான 28ஆம் தேதி நிறைவுற்றது. நிறைவு விழாவில் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை கௌரவிக்கும் வகையில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனையொட்டி பலரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “கோவாவில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டிற்கான பன்னாட்டு திரைப்பட விழாவில் தமிழ்த்திரையுலகில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக உச்ச நட்சத்திரமாக திகழும் பெருமதிப்பிற்குரிய ரஜினிகாந்துக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட செய்தியறிந்து பெரும் மகிழ்ச்சியும், பெருமிதமும் அடைந்தேன்.
மக்களை கவர்ந்திழுக்கும் தனித்துவமிக்க தம் கலை ஆற்றலால் திரைத்துறையில் இது வரை யாரும் சாதித்திடாத வகையில் தொடர் வெற்றி நாயகனாக 50 ஆண்டுகளாக திகழும் ரஜினிகாந்தின் கலைப்பணி மிகுந்த போற்றுதற்குரியதாகும். திரைக்கலையில் ரஜினிகாந்தின் அயராத உழைப்பும், ஒப்படைப்பும் திரைத்துறை மட்டுமின்றி எத்துறையிலும் சாதிக்கத் துடிக்கும் இளைய தலைமுறை பிள்ளைகள் பின்பற்ற வேண்டிய ஆகச்சிறந்த வாழ்வியல் பாடமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us