சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மேதகு படத்தை இயக்கிய கிட்டுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சல்லியர்கள்’. சத்யா தேவி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.
இப்படம் நேற்று வெளியாகவிருந்தது. ஆனால் போதிய திரையரங்குகள் கிடைக்காததால் வெளியாகவில்லை. இது குறித்து மிகுந்த வேதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நீண்ட பதிவு ஒன்றை அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். மேலும் “எங்கிருந்தோ வந்து எம்மக்களின் பணத்தை தின்று கொழுத்துவிட்டு, எங்களையே எப்படி புறக்கணிக்க முடிகிறது?, பெரிய படங்களுக்குக் கொடுக்கும் மரியாதையை சிறிய படங்களுக்கு தராததும் ஒரு வகை தீண்டாமை தான்” என காட்டமாக விமர்சித்திருந்தார். அதோடு படம் திரையரங்கு அல்லாமல் OTT PLUS என்கிற தளத்தில் வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சல்லியர்கள் படம் திரையரங்குகளில் வெளியாகதது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில், “ஈழ விடுதலையின் ஈக வரலாற்றை பேசும் 'சல்லியர்கள்' திரைப்படத்தை OTT PLUS தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்வோம்! ஈழத்தாயக விடுதலைப் போராட்டம் குறித்தும், அதன் ஈடு இணையற்ற ஈகங்கள் குறித்து அன்புத்தம்பி கிட்டுவின் இயக்கத்தில் இளம் கலைஞர்கள் நடிப்பில் உருவான 'சல்லியர்கள்' திரைப்படத்தை முன்னரே 2 முறை பார்த்திருக்கிறேன். மிகச்சிறந்த ஒவ்வொரு தமிழர்களும் காணவேண்டிய அத்திரைப்படத்திற்குப் போதிய திரையரங்குகள் வழங்க மறுப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/02/04-7-2026-01-02-19-12-27.jpg)
திரைக்கலையை அதன் பொருட்செலவையோ, அதில் நடித்துள்ள முன்னணி நடிகர்களை வைத்தோ மதிப்பிடுவது தவறானது. ஒரு திரைப்படம் நாம் வாழும் சமூகத்தில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பொறுத்தே அதன் தரத்தை மதிப்பிட வேண்டும். மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தவொரு கலைப்படைப்பும் வீணானதே ஆகும். அவ்வகையில் ஈழத்தாயக விடுதலைப்போராட்டத்தின் ஈகங்களை உலகத்தமிழ் மக்களிடத்தில் கொண்டு செல்லும் ஆகச்சிறந்த கலைப்படைப்பான 'சல்லியர்கள்' திரைப்படத்தை, குறைந்த பொருட்செலவில் உருவான திரைப்படம் என்பதற்காக பெரு திரையரங்க வளாகங்கள் ஒரே ஒரு திரையரங்குகளைக் கூட ஒதுக்க மறுக்கும் செயல் தமிழ் உணர்வாளர்களைச் சீண்டிப்பார்க்கும் செயலேயாகும். இந்தப் பெருநிறுவனங்கள் ஆந்திராவில், கர்நாடகாவில் அம்மண்ணின் வரலாற்றுப் பெருமைகளை விளக்கும் திரைப்படங்களைப் புறக்கணிக்கும் முடிவெடுக்குமா? புறக்கணித்த பிறகு தொடர்ந்து அம்மாநிலங்களில் இயங்கிடத்தான் முடியுமா?
திரையரங்கங்கள் மீதான கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாதிக்கத்தை ஒழித்து, குறைந்த பொருட்செலவில் உருவாகும் திரைப்படங்களுக்குத் தரப்படும் பாகுபாட்டையும் நெருக்கடியையும் தவிர்த்து அனைவருக்கும் சரியான சமமான வாய்ப்பை வழங்குவதற்கு, தமிழ்த்திரைப்படங்கள் திரையிடலுக்குத் திரையரங்கங்கள் ஒதுக்குவது குறித்த நியாயமான கொள்கை முடிவை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.
தடைகளையும், நெருக்கடிகளையும் சல்லியர்கள் திரைப்படம் OTT PLUS என்ற தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. ‘சல்லியர்கள்’ போன்ற தமிழர் வீரவரலாற்றை விளக்கும் திரைப்படங்களுக்குப் பேராதரவு அளித்து, மிகப்பெரிய வெற்றிப்பெறச் செய்வதன், இனி இதுபோன்ற திரைப்படங்களைப் புறக்கணிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டியது உலகத்தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் பெருங்கடமையாகும்.
ஆகவே, உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் கடந்து தமிழீழ விடுதலை போராட்டத்தின் ஈக வரலாற்றைச் சொல்லும் மாபெரும் கலைப்படைப்பான சல்லியர்கள் திரைப்படத்தை தடைகளை தகர்த்து வெளியாகியுள்ள ‘OTT PLUS’ தளத்தில் பார்த்து, பெருவெற்றி பெறச்செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us