இந்தாண்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொங்கல் வெளியீடான ‘பராசக்தி’ படம், கடந்த 10ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. சுதா கொங்கரா இயக்கியிருந்த இப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இவருக்கு இப்படம் 100வது படமாகும். அதே போல் சிவகார்த்திகேயனுக்கு இது 25வது படம். 

Advertisment

இப்படம் 1960களில் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் வெடித்த மாணவர்களின் போராட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் இப்படத்தை பார்த்து படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த படத்தை படமாகத்தான் பார்க்க வேண்டும். மற்றபடி மொழி போராட்ட வரலாறு ஆவணப் படம் கிடையாது. மொழிப் போராட்ட உணர்வை எடுத்துக் கொண்டு அதில் ஒரு கற்பனை திரைக்கதை அமைத்து எடுத்திருக்கிறார்கள். இதில் காதல், அண்ணன் தம்பி போன்ற விஷயங்களை சேர்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு தேசிய இனங்களுக்கும் அதன் மொழி உயிர். அதுவே முகவரியும் அடையாளமும். இந்தியாவின் சிறப்பு வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட ஒரு ஐக்கியம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மொழி முக்கியம்.

Advertisment

அப்படியிருக்கும்போது ஒரே மொழியை அனைவரும் கற்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்க முடியாது. அந்த உணர்வின் அடிப்படையிலேயே மொழிப் போராட்டம் வெடித்தது. தமிழ் திரைப்படத்தில் தமிழ் வாழ்க என்று ஒரு சத்தம் கேட்பது வியக்கத்தக்கதாக இருந்தது. தம்பி சிவகார்த்திகேயன் கடைசியாக கையை உயர்த்தி தமிழ் வாழ்க என்று சொல்லும் போது நானே கத்துகிற மாதிரி தான் இருந்தது. மொத்தமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, மொழி வழி தேசிய இனங்களுக்கும் அவர்கள் மொழி முக்கியம். விரும்பினால் எந்த மொழியையும் கற்போம். இளைஞர்கள் இது தான் மொழிப் போராட்ட வரலாறு என நினைத்துவிடக்கூடாது. அது தனியாக இருக்கிறது. அதை தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையான மொழிப் போராட்டத்தை எடுத்தால் அது திரைக்கு வராது. ஒரு படமாக பார்த்தால் நல்ல படம். 

படத்தில் என்னுடைய தம்பி சிவகார்த்திகேயன் பங்களிப்பு, எதிர் நாயகனாக நடித்துள்ள ரவி மோகன் பங்களிப்பு, தம்பி அதர்வா பங்களிப்பு, ஒளிப்பதிவு , குறிப்பாக தம்பி ஜிவி பிரகாஷின் பின்னணி இசை அனைத்தும் நேர்த்தியாக இருந்தது. இயக்குநருக்கு என் பாராட்டுகள். இது ஒரு பிரச்சனையான களம். இதை ஒரு பெரிய இயக்குநர் தொட்டு, செய்திருக்கிறார். மொழிப் போரை அப்படியே காட்டவில்லை என்றாலும் அந்த உணர்வைச் சிதைக்கவில்லை” என்றார்.

Advertisment

பின்பு செழியன் கதாபாத்திரம் உண்மையாக இருக்குமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், “சீமான் தான் அந்த செழியன். அந்த கதாபாத்திரத்திற்குப் பெயர் செழியன் என வைத்துவிட்டார்களே தவிர நான்தான் செழியன்” என்றார்.