மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் கடந்த 17ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘பைசன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்க அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
இப்படத்திற்கு திரை பிரபலங்கள் தொடர்ந்து பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் தொடங்கி, இயக்குநர்கள் வெற்றிமாறன், சேரன், வசந்தபாலன் உள்ளிட்ட பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராடியிருந்தார். சமீபத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இப்படத்தை பாராட்டி ‘இயக்குநர் திலகம்’ என்ற பட்டத்தையும் மாரி செல்வராஜுக்கு வழங்கியிருந்தார். தொடர்ந்து துறை வைகோவும் படத்திற்கும் பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இப்படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். படம் பார்த்துவிட்டு மாரி செல்வராஜுடன் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சரியான நேரத்தில் சரியான படைப்பை என்னுடைய தம்பி மாரி செல்வராஜ் கொடுத்திருக்கார். அது எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும். சமூக சீர்திருத்தத்திற்கு வந்த பல புரட்சியாளர்கள், போராளிகள், தலைவர்கள், இயக்கங்கள்... இவையெல்லாம் செய்ய முடியாததை என்னுடைய தம்பி செஞ்சிட்டான். அது எனக்கு மன நிறைவு. பரியேறும் பெருமாள் படத்துல யாரும் எந்தக் குறையும் சொல்ல முடியாது. ஏன்னா அதுல இருந்த நேர்மை. அது எல்லாத்தையும் ஏத்துக்கவச்சுருச்சு. அதேதான் மாமன்னன், கர்ணன் படத்துலையும். இந்தப் படத்துலயும் அது இருக்கிறதுனால அந்த நேர்மை எல்லாத்தையும் கொண்டாட வைக்குது. ஒரு கபடி விளையாட்டை வச்சு எத்தனையோ படங்கள் வந்திருக்கு, ஆனா இவ்வளவு நேர்த்தியான ஒரு பதிவு இதுதான் முதல் முறை.
இந்த படத்தைத் தாண்டி ஒரு பதிவை எடுக்கணும்னா அது அரிதிலும் அரிதானது தான். இப்படி ஒரு கதைகளத்தை தேர்வு செஞ்சு அதை எடுத்து, ரசிக்க வச்சு வெகுமக்கள் படமா மாத்தி இதுக்குள்ள இப்படி ஒரு அரசியலை செஞ்சுரலாம்னு வந்த துணிவு, அதை நான் உண்மையிலே மனம் திறந்து பாராட்டுறேன். பாராட்டுக்கள் என்ற சொல் பத்தல. இந்தப் படம் நல்லா இருக்குன்னு சொல்லக்கூடாது ரொம்ப ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லணும். அவ்வளவு சிறப்பான படைப்பு. கொஞ்சம் காலதாமதமா பார்த்ததுக்கு நான் வருந்துறேன். மாரிக்கு ஒரு அண்ணணா நான் சொல்லிக்கிறது, இதே நிதானம் இதே வேகம் இதே பொறுப்புணர்வு தொடர்ந்து இருக்கனும். ஏன்னா நம்மள்ல இருந்து எப்பயாவது தான் ஆகச் சிறந்த படைப்பாளி வருவாங்க. மாரி இந்த இடத்துக்கு வர எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாருன்னு எனக்கு தெரியும்.
சத்யஜித்ரே முதிர்ந்த வயசுல தான் ஒரு தரமான நிதானமான படத்தை எடுத்தார். ஆனால் அந்தத் தரத்துக்கு இப்பவே ஒரு இளைஞன் எடுத்து இருக்கான். இது சாதாரண விஷயம் இல்லை. இந்தப் படத்தை நிறைய பேர் போய் பாக்கணும். பார்த்து ஊக்கப்படுத்தனும். உலகத்துல எத்தனையோ விளையாட்டு இருக்கு, எல்லா விளையாட்டிலும் தொட்டா தவறு. ஆனா இந்த விளையாட்டுல தான் தொட்டா வெற்றிப்புள்ளி. அது ஏன்னா இந்த சாதிய ஏற்றத்தாழ்வுகளை தகர்த்து ஒரு சமத்துவ சமூகத்தை படைக்கணுன்ற எண்ணம். எங்க முன்னோர்கள் கண்டுபிடிச்ச விளையாட்டு இந்த கபடி விளையாட்டு. இந்த விளையாட்டு உலகம் முழுக்க விளையாடப்படுவது எங்களுக்கு இன்னொரு பெருமை. அந்த விளையாட்டுக்கு மீண்டும் ஒரு புத்துணர்ச்சி கொடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ். அது ரொம்ப பாராட்டத்தக்க ஒன்று. இந்த படத்தை தயாரித்த தம்பி பா.ரஞ்சித், அவர் கூட உடனிருந்து உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாருக்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
உலக வரைபடத்தில் ஜமைக்கா என்ற நாடு எங்க இருக்குன்னே தெரியாது. ஆனா உசைன் போல்ட் என்ற ஒற்றை மனிதன் ஓடி ஓடி தனது தாய் நாட்டை உலக உயரத்துக்கு கொண்டு சென்றான். அதேபோன்று எங்க பொண்ணு கார்த்திகா கண்ணகி நகரை இப்போது பிரபலமாக்கியுள்ளார். அவ்வளவு இடையூறுகள் இருக்கு. அதையெல்லாம் தாண்டி தனது தனித்திறனால் சாதிக்கிற பிள்ளைகளை நாம் கொண்டாடணும். அப்படி சாதிச்ச தம்பி மாரி செல்வராஜுக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள். குறிப்பா துருவுக்கு என்னுடைய அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். அவர் வருங்காலத்தில் தலைசிறந்த ஒரு திரை கலைஞனாக இருப்பார்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/06/20-10-2025-11-06-11-15-47.jpg)