சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், ‘தமிழ் பெண்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம்’ விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில், மொத்தம் 1 கோடியே 30 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்களும் பெண் உயர் அதிகாரிகளும் பல்வேறு துரைகளில் சாதனை படைத்த பெண்களும் கலந்து கொண்டனர்.
மேலும் திரைப்பிரபலங்கள் சத்யராஜ், வசந்தபாலன், தேவயானி, ரோகினி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். மேடையில் சாதனை படைத்த பெண்களுக்கு மத்தியில் சத்யராஜ் பேசுகையில், “இவங்களுடைய சாதனைகளை பார்க்கும் பொழுது எனக்கு வியப்பாக இருக்கிறது. நான் உங்கள் முன்பு நிற்கும் பொழுது கொஞ்சம் உயரமாக தெரிவேன். ஆனால் உங்களுடைய சாதனைகளுக்கு முன்பு நான் கம்மிதான். எந்த அளவுக்கு மன தைரியம் மற்றும் உறுதியோடு உழைத்து இருந்தால் இந்த இடத்திற்கு நீங்கள் வந்திருக்க முடியும். நான் கொஞ்சம் வசதியான குடும்பத்தில் பிறந்ததால் பெண்களின் கஷ்டத்தை பார்த்ததில்லை. இது போன்று யாராவது சொன்னால் தான் அதைக் கேட்டு வியப்பாவேன். ஒரு வறுமையில் இருக்கும் குடும்பத்தில் நான் பிறந்திருந்தால் உங்கள் அளவு வளர்ந்திருக்க முடியுமா என்பது தெரியவில்லை.
இந்த கண்கொள்ளா காட்சியை பார்ப்பதற்கு பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் இல்லை. அது வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் கண்ட கனவு தான் இது. உங்களின் முன்னேற்றம் என்பது திராவிட சித்தாந்தத்தில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா இல்லையா? என்பது வேறு. ஆனால் உங்களின் முன்னேற்றம் நூறு வருடத்திற்கு முன்பு நீதிக்கட்சிகள் ஆரம்பித்த விஷயம். முத்துலட்சுமி ரெட்டி என்பவர்தான் முதல் சாதனை படைத்த பெண் மருத்துவர். அதன்பிறகு மூவலூர் இராமாமிர்தம் அம்மா பெண்களுக்காக மிகப்பெரிய புரட்சியை செய்தார். அதனுடைய நீட்சி தான் நீங்கள். இதற்கான வேர் எங்கு இருக்கிறது என பார்த்தால் திராவிட சித்தாந்தம் தான். அதை நாம் புரிந்து கொண்டால் தான் எந்த அளவு, இந்த திராவிட மாடல் அரசுக்கு நாம் துணையாக நிற்க வேண்டும் என்பது புரியும். எதைப் பார்த்தும் ஏமாந்து விடாதீர்கள், சாதனை பக்கம் நில்லுங்கள்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/13/19-40-2025-12-13-11-52-32.jpg)