ராஜூ முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மை லார்ட்’. ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்தில் சைத்ரா, ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயபிரகாஷ், இயக்குநர் கோபி நயினார், வாசு மித்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையில் இதுவரை ‘எச காத்தா’ மற்றும் ‘ராசாத்தி ராசா’ ஆகிய பாடல்கள் வெளியாகின. படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. கிட்னி திருடும் கும்பலை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருப்பது தெரிய வந்தது.
இப்படம் வரும் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நடந்த செய்தியாளர் சந்திப்பில் சசிகுமார் கலந்து கொண்டு பேசுகையில், “மை லார்ட் ஒரு கோர்ட் ரூம் டிராமா கிடையாது. ஒரு கடைக்கோடி மனிதனுக்கு தண்டிக்க கூடிய அதிகாரத்ம் கிடைத்தால் என்ன செய்வான்? என்பதை சொல்லும் படம் தான் மை லார்ட். அந்த கடைக்கோடி மனிதன் முத்துசிற்பி. அவரை குறிக்கும் சொல் தான் மை லார்ட். இது தான் இந்த தலைப்புக்கு விளக்கம். இந்த நிகழ்வுக்கு பாலாவை அழைப்பதாக ராஜு முருகன் சொன்னார். அவர் வரமாட்டார் என சொன்னேன். அதாவது அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற அர்த்தத்தில் சொன்னேன். வந்துவிட்டால் என்ன தருவீங்க என ராஜூ முருகன் கேட்டார். எது வேணாலும் தருவேன் என சவால் விட்டேன். ஆனால் பாலா வந்துவிட்டார். அதனால் அவர் வந்துவிட்டார் என சந்தோஷப்படுவதா. இல்லை ராஜூ முருகன் என்ன கேட்கப்போகிறார் என வருத்தப் படுவதா?
இங்கு என்னை நிறைய பேர் வாழ்த்தினார்கள். இந்த வாழ்த்தை பாலா அண்ணா பார்த்து சந்தோஷப்பட வேண்டும். முதல் முதலில் சேது படத்தில் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அதனால் இந்த வாழ்த்தை அவருக்கு நான் பெற்றுக் கொடுக்கிறேன். இந்த படத்தின் தயாரிப்பாளர், 'நான் ராஜு முருகனோட ஒரு படம் பண்ணினேன். ஆனால், அந்தப் படம் தோத்துடுச்சு. அவர் நல்லவர். அவர் ஜெயிக்கணும் என சொன்னார். ராஜு முருகன் மாதிரியான ஒரு இயக்குநர் தோல்வியடையவே கூடாது. அவர் ஜெயிக்கிறதுக்கு என்னால என்ன பண்ண முடியுமோ அதை செய்வேன் என சொன்னார். அவருக்கு நன்றி.
ராஜூ முருகனை பற்றி ஒருவர் சைக்கோ என என்னிடம் சொன்னார். நானும் என்னடா இப்படி சொல்றாங்களே என முதல் நாள் ஷூட்டிங் போது என்ன தான் செய்கிறார் என பார்த்தேன். ஆனால் ஷூட்டிங் முடிந்து முழுப் படத்தை பார்க்கும் போது அவர் எந்தளவு சினிமா மேல் சைக்கோவாக இருக்கிறார் என்பது தெரியவந்தது. அதனால் அவரை சைக்கோ என சொல்வது உண்மைதான். அவருடன் இன்னொரு படமும் நடிக்க சம்மதித்துவிட்டேன். படம் ஒரு கட்டத்தில் நிற்கும் சூழல் வந்துவிட்டது. ஒரு கேரக்டரில் நடிக்கவிருந்த நடிகர் திடீரென நடிக்க முடியாமல் போனதால் கடைசியாய அதில் குரு சோமசுந்தரம் நடித்தார். கதையே கேட்காமல் ராஜூ முருகன் கேட்டதற்காக உடனே வந்து நடித்து கொடுத்தார். அவருக்கு நன்றி” என்றார்.
Follow Us