திரைக்கலைஞர்களை பாராட்டும் வகையிலும், அவர்களின் திறமையை அங்கீகரிக்கும் வகையிலும் பல்வேறு தளங்களில் திரைப்பட விருதுகள் வழங்கப்படுகிறது. அந்தவகையில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் சென்னையில் நடத்தப்படும் விழா, சென்னை சர்வதேச திரைப்பட விழா. வழக்கம் போல இந்த ஆண்டும் கடந்த 11 ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில் சிறந்த நடிகர், நடிகை மற்றும் சிறந்த படங்கள் போன்ற பல்வேறு தளத்தில் விருதுகள் வழங்கப்பட்டது. 

Advertisment


இதில் சிறந்த நடிகருக்கான விருது இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமாருக்கு வழங்கப்பட்டது. "டூரிஸ்ட் பேமிலி"  திரைப்படத்தில் சசிகுமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். உடன் சிம்ரன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்தப் படம் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று, எதிர்பார்த்ததை விட மிகப்  பெரிய அளவிலான வெற்றியைப் பெற்றது. மேலும் அப்படத்தில் நடித்திருந்த அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இதில் குறிப்பாக சசிகுமாரின் நடிப்பு அனைவரையும் கவரும் வகையில் இருந்தமையால், அவரின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. இதன் நீட்சியாக சமீபத்தில் நடந்த சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சசிகுமாருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்ததோடு மட்டுமல்லாமல் , சிறந்த திரைப்படத்திற்கான விருதையும் இப்படம் வென்றுள்ளது. 

Advertisment

சசிகுமார் விருது வென்றதால் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார் இயக்குநர் பாலா. இந்த மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் வெளிப்படுத்தும் வகையில் இயக்குனர் பாலா சசிகுமாருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் சசிகுமாரை பேரன்பு மிக்கவன் என்றும்  கொந்தளிக்கிற கடலையும் தனது பண்பால் அமைதியாகும் திறன் கொண்டவன் என்றும் போராடி வெல்லும் குணம் கொண்டவன் என்றும் பாராட்டியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருது வென்றது பெரு மகிழ்ச்சியை தருகிறது என்று பாராட்டிய பாலா, சசிகுமாருக்கு ஒரு வேண்டுகோளையும் வைத்துள்ளார். அது சசிகுமார் மீண்டும் படம் இயக்க வேண்டும் என்பது தான். இதற்கு பதிலளித்த சசிகுமார் உங்கள் ஆசையை விரைவில் நிறைவேற்றுகிறேன் என்று கூறியுள்ளார்.