பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் படத்தின் முதல் பாடலாக வெளியான ‘ஊரும் ப்ளட்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இரண்டாவது பாடலாக வெளியான ‘நல்லாரு போ’ பாடல் போதிய வரவேற்பு பெறவில்லை. சமீபத்தில் வெளியான ‘சிங்காரி’ பாடலும் அப்படியாகவே அமைந்தது.
இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. இதனையொட்டி ஹைதராபாத்தில் நடந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர். அப்போது, ஒரு செய்தியாளர், பிரதீப் ரங்கநாதனிடம், “நெகட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் ஒரு ஹீரோ மெட்டிரியலாக இல்லை, ஆனால் நீங்கள் இப்போது இருப்பதற்கு எது காரணம், விடாமுயற்சியா அதிர்ஷ்டமா” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு யோசித்தப்படி பதில் சொல்ல தயாரானார் பிரதீப் ரங்கநாதன். ஆனால் அதற்கு முன்னால் அருகில் இருந்த சரத்குமார் மைக்கை வாங்கி, “இந்த துறையில் நான் 170 படங்களில் நடித்துள்ளேன்... யார் ஹீரோ மெட்டிரியல் என்பதை நீங்கள் சொல்ல முடியாது. எல்லாரும் ஹீரோ மெட்டிரியல் தான். ஒரு ஹீரோவாக இருப்பதற்கு எந்த விதிமுறையும் இல்லை. சமூகத்திற்கு நல்லது செய்யும் அனைவரும் ஹீரோ தான்” என பதிலடி கொடுத்தார்.