திரைத்துறையில் 170 படங்களில் நடித்து 35 வருடங்களுக்கு மேலாக பயணித்து வருபவர் சரத்குமார். இப்போது தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் நடித்துள்ளார். மேலும் விஜயகாந்த் மகனான சண்முகப் பாண்டியன் நடித்த ‘கொம்பு சீவி’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயராகி வருகிறது.
இந்த நிலையில் பெரம்பலூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் சரத்குமார். அதில் மாணவர்களுக்கு தைரியமாகப் பேச வேண்டும் என அறிவுரை வழங்கினார். அவர் பேசியதாவது, “ஆங்கிலத்தில் பேசினால் தான் அறிவாளி என நினைத்து விடாதீர்கள். நம்ம மொழியில் பேசினாலே அறிவாளிதான். மொழி என்பது மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்கு தான். நீங்க என்ன சொல்ல நினைக்கிறீர்களோ அதை எந்த மொழியில் சொன்னாலும் புரியும் படி சொன்னாலே போதும். சில இடங்களில் நான் பார்க்கிறேன், கிராமத்தில் சில மாணவர்கள் பேசுவதற்கு தயங்குகிறார்கள். அப்படியெல்லாம் இருக்காதீர்கள். வெட்கப்படாமல் தைரியமாக பேசுங்கள். யாராவது பேசினால் உற்று கவனியுங்கள். கவனிப்பது தான் அறிவு. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு நாம் பதிலளிக்க வேண்டும்.
என்னுடைய வாழ்க்கையில் நான் பல சோதனைகளை பார்த்திருக்கிறேன். தோல்வி என்பது நீங்கள் மனதளவில் நினைத்தால் தான் அது தோல்வி. தோல்வி தான் வெற்றிக்கு உதவி பண்ணும். விழுந்து எழுந்திருக்காமல் இருந்தால் தான் தோல்வி. தோல்விக்கான காரணத்தை எண்ணிப்பார்ப்பது தான் வெற்றிக்கான முதல்படி. அதனால் பல முறை வாழ்க்கையில் தோற்க வேண்டும். நம்மிடம் தன்னம்பிக்கை இருக்கும் போது உறுதி இருக்கும் போது நேர்மை இருக்கும் போது நியாமும் தர்மமும் உங்களின் பேச்சில் இருக்கும் போது அந்த உறுதி உங்களை வெற்றி பெறச் செய்யும்” என்றார்.