பொன்ராம் இயக்கத்தில் விஜயகாந்த்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘கொம்பு சீவி’. இப்படத்தில் சண்முகப் பாண்டியனோடு சரத்குமார், காளி வெங்கட், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டைரக்டர் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துளார். உசிலம்பட்டி பின்னணியில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம் கடந்த 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்லையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட படக்குழுவினர் படம் தொடர்பாக பல விஷயங்களை பகிர்ந்தனர். அப்போது மேடையில் சரத்குமார் பேசுகையில், “இப்படத்திற்கு ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்கள் என்ஜாய் பண்ணி பார்க்கிறார்கள். இப்படிப் பார்க்கும் படத்தில் சில கருத்துக்கள் பதிவு செய்யப்பட வேண்டும். எப்படி டியூட் படத்தில் சில கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டதோ, அதேபோல் இதிலும் சில கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
டியூட் படத்தில் இடம்பெற்ற கருத்துகள் சமுதாயத்துக்கு நல்ல கருத்தா? கலாச்சார ரீதியாக சரியா? என்ற விமர்சனம் எழுந்தது. சில கருத்துக்களை ஆழமாக சொல்லும்போது எது தவறு என்பதை சுட்டிக்காட்ட வேண்டும். அது போலத் தான் இந்த கொம்பு சீவி படத்திலும் கஞ்சா விற்பனை காட்சிகளை காண்பித்து அதனை எப்படி ஒழிக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறோம். அது எந்த காலகட்டத்தில் நடந்தது என்பதை பொன்ராம் சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் வைகை நதியில் தண்ணீர் வற்றிய பிறகுதான் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியும். தண்ணீர் நிரம்பின பிறகு செய்ய முடியாது. அதனால் அங்கு 12 கிராமங்கள் அகற்றப்பட்ட பிறகுதான் வைகை அணை கட்டப்பட்டது. இது யாருக்கும் தெரியாத மற்றும் புத்தகத்தில் இடம் பெறாத கருத்து. ஆனால் உண்மையாக நடந்தது. இதனை பொன்ராம் காண்பித்திருக்கிறார்.
அப்பகுதியில் இருந்தவர்கள் கஞ்சா விற்பனை தொழிலை செய்து கொண்டிருந்தார்கள். பின்பு முற்றிலுமாக அது அழிக்கப்பட்டது. எங்கள் குழுவில் பொன்ராம், சண்முக பாண்டியன், நான்... யாரும் புகைப்பிடிப்பதில்லை. அதன் காரணத்தால் தான் நான் இப்போது 71 வயதிலும் இப்படி இருக்கிறேன். இதுவரை என் வாழ்க்கையில் நான் புகைப்பிடித்ததும் கிடையாது, மது குடித்ததும் கிடையாது. அதனால் சில கருத்துக்களை யார் சொன்னால் சரியாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி சொல்கிறோம். அப்படி சொல்லும் போது அக்கருத்து மக்களிடம் ஆழமாக செல்லும். மக்களுடைய கருத்தை ஆழமாக புரிந்துதான் இயக்குநர்கள் படம் எடுக்கிறார்கள். தவறாக எதையும் சித்தரிப்பதற்காக அல்ல. புஷ்பா, புஷ்பா 2 படங்களில் செம்மரம் கடத்துபவர் தான் ஹீரோ. எதிர்த்து நிற்பவர் போலீஸ். ஆனால் போலீஸ்தான் வில்லன். ஆனால் நாங்கள் அப்படி காட்டவில்லை. போலீசை மதிக்காமல் எதிர்த்து நின்றால் கடைசியில் தண்டனை கிடைக்கும் என்பதை சொல்லியிருக்கிறோம்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/22/14-35-2025-12-22-17-52-44.jpg)