மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பைசன்’ படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
படம் அக்டோபர் 17ஆம் தேதி யு/ஏ சான்றிதழுடன் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. 5 ஸ்டார் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று முன் தினம் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. தென் மாவட்டத்தில் இருந்து கபடி போட்டியில் ஜெயிக்க போராடும் ஒரு இளைஞனின் வாழ்க்கை அரசியல், பகை, சமூகம் காரணமாக என்னவானது என்பதை ட்ரெய்லர் பேசியிருந்தது. படத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்தின் ஆஸ்தான இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் தற்போது பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, “ட்ரெய்லரில் சிறப்பான காட்சிகள், தயாரிப்பு பணிகள், இசை மற்றும் நடிப்பு தெரிகிறது. பைசன் படம் ஒரு முக்கிய விளையாட்டு படமாக இருக்கும். ஜெயிச்சிடு கபிலா...” எனக் குறிப்பிட்டு பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், துருவ் மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோருக்கு தனது எக்ஸ் பக்கம் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் ட்ரெய்லரை அப்பதிவில் பகிர்ந்துள்ளார். இதற்கு பா.ரஞ்சித் நன்றி தெரிவிக்கும் விதமாக ஹார்ட் எமோஜியை பகிர்ந்துள்ளார். ‘ஜெயிச்சிடு கபிலா’ என்ற வசனம் சந்தோஷ நாராயணனும் பா. ரஞ்சித்தும் இணைந்து பணியாற்றிய ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் வரும் வசனம் என்பது நினைவுகூரத்தக்கது.
Great visuals , production values , music and performances in this trailer . #Bison could potentially be a benchmark sports film . Jeichidu kabilaaaa 🔥🔥🔥. @beemji@mari_selvaraj#Dhruv@nivaskprasannahttps://t.co/1prH1g4hXr
— Santhosh Narayanan (@Music_Santhosh) October 14, 2025