ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள திரைப்படம் ‘வா வாத்தியார்’. இப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர், ஷில்பா மஞ்சுநாத், ஆனந்த்ராஜ், கருணாகரன், ரமேஷ் திலக், பி எல் தேனப்பன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகிறது
இப்படத்தின் வெளியீட்டு வேலைகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில், இப்படத்திலிருந்து டீசர், பாடல்கள், ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. இப்படத்திலிருந்து ஏற்கனவே இரண்டு பாடல்கள் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில், சமூக வலைத்தளத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல் வீடியோ வைரலாகி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலான ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் பாடலை தனது அம்மாவுடன் சேர்ந்து ரீமிக்ஸ் செய்து பாடிய பாடல் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவில் நடிகர் கார்த்தி சந்தோஷ் நாரயாணனின் அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டியும் “வாவ் சூப்பர்” என பதிவிட்டுள்ளார். மேலும் திரைத்துறை பிரபலங்கள் நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ், இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், பாடகர் விஜய் ஏசுதாஸ் உட்பட பலரும் வீடியோ பார்த்து வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
இப்படத்தில் நடிகர் கார்த்தி எம் ஜி ஆர் ரசிகராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதை தொடர்ந்து, இந்த வீடியோ வெளியாகி உள்ளதால், இப்பாடலின் ரீமிக்ஸ் வடிவம் இப்படத்தில் இடம்பெறுகிறதா ? இப்பாடலை வெளியிடுங்கள் என ரசிகர்கள் ஆவலோடு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
Follow Us