சிங்கப்பூரில் தமிழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு, Mediacorp சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சி மற்றும் the media நிறுவனத்தின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியுள்ள வரலாற்று நெடுந்தொடர் சண்டமாருதம்.தமிழர்கள் சிங்கப்பூருக்கு எப்படி வந்தார்கள், சிங்கப்பூர் தேசிய இனங்களில் தமிழர்களும் இணைந்து, தமிழ் மொழி தேசிய மொழிகளில் ஒன்றாக எப்படி அங்கீகரிக்கப்பட்டது போன்ற வரலாற்று உண்மைகளின் பின்னணியில், நாராயண பிள்ளை, முன்ஷி அப்துல்லா, ராஃபில்ஸ் போன்ற நிஜ கதாபாத்திரங்களை வைத்து புனையப்பட்ட கற்பனை கதை இது.
1820-களில், ஆங்கிலேயர்கள் தமிழர்களின் நெசவுத் தொழிலை சீரழித்து, இங்கிலாந்தில் இருந்து துணியை இறக்குமதி செய்ய முயன்றதால், பாரம்பரிய நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இங்கிருந்து கதை தொடங்குகிறது.
தென்னரசு: ஒரு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த இவர், ஆங்கிலேயர்களுக்கு எதிராக இருந்ததால் தமிழகத்தில் வாழ முடியாமல் கப்பலேறி மலாயா செல்கிறார். இந்தக் கதாபாத்திரத்தில் மலேசிய நடிகர் சூர்ய பிரகாஷ் மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.
மதுவதனி: இந்த கதாபாத்திரத்தில் நிஷா குமார் நடித்துள்ளார். ஆங்கிலம் கற்றுக்கொண்டு, ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தையும், இந்தியாவை அவர்கள் ஆட்சி செய்வதையும் தமிழக மக்களுக்கு எடுத்துரைத்ததால் சிறைப்படுத்தப்படுகிறார். இவருக்குத் தந்தையாகப் புகழ்பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நடித்திருக்கிறார். அவர் நடிப்பில் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
செங்கோடன்: வேலுவின் எதிராளியான இவர், ஜல்லிக்கட்டு போட்டியில் வேலுவிடம் தோற்றதால் இவரும் மலாயா செல்கிறார். இவர்களின் பகை எவ்வாறு முடிகிறது, யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை இயக்குனர் முகமது அலி சுவாரசியமாக இயக்கியுள்ளார்.
இவர்களுடன் சிங்கப்பூர் நடிகர்களான புரவலன், லிங்கம், நிஷா குமார், மலேசிய நடிகர்களான கோவிந்த் சிங், வினோசன், மற்றும் தமிழக நடிகர்களான மோகன் ராம், மதுமிதா, காதல் சுகுமார் ஆகியோரும் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் நடிகை கோகிலா மற்றும் "கிழக்குச் சீமையிலே" புகழ் அஸ்வினி ஆகியோர் அம்மா கதாபாத்திரங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாராயண பிள்ளை என்ற உண்மையான கதாபாத்திரத்தில் ப்ருத்திவி ராஜ் மற்றும் முன்ஷி அப்துல்லா கதாபாத்திரத்தில் கோவிந்த் சிங் நடித்துள்ளனர்.
.
இந்தத் தொடரின் செட் வடிவமைப்புகள் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. உடை வடிவமைப்பு உலகக்தரத்தில் உள்ளது, 1820-களின் தமிழகத்தை நம் கண்முன்னே நிறுத்தியுள்ளனர்.ஒலி-ஒளி அமைப்பு, பின்னணி இசை அனைத்தும் அந்த காலத்துக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. வசனங்கள் அன்றைய பழைய தமிழகத்தில் பேசப்பட்ட அசல் சொற்களைக் கொண்டிருப்பதால், சில சமயங்களில் புரிந்துகொள்ளத் தனி அகராதி தேவைப்படுகிறது.
இயக்குனர் முகமது அலி இப்படி ஒரு கதையை எழுதி இயக்கியதற்கு சிறப்புப் பாராட்டுகள் தேவை. தமிழர்கள் தங்கள் வேர்களை மறந்துவிட்டாலும், எப்படித் தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறினார்கள், அதற்குக் காரணம் என்ன, எப்படி கடல் கடந்து புதிய தேசத்தில் தங்கள் உழைப்பின் மூலம் ஒரு தேசத்தை உருவாக்கினார்கள் என்பதை உணர்ச்சிப் பெருக்குடன், அழகாகவும், அற்புதமாகவும் எழுதி இயக்கியது அருமை.
இந்தத் தொடர் இந்தியா, மலேசியா, இந்தோனேசியா எனப் பல நாடுகளின் கடல்களைக் கடந்து படமாக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நெடுந்தொடர். சிங்கப்பூர் தேசிய தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிபரப்பப்படுகிறது. தமிழக மக்கள் இதை YouTube-லும் கண்டுகளிக்கலாம்.
சண்டமாருதம் ஒரு முக்கியமான வரலாற்று ஆவணம். பிரிட்டிஷார் தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகள், தமிழர்கள் எவ்வாறு மலேசியா சென்று அங்கிருந்து சிங்கப்பூர் என்ற தேசத்தை உருவாக்கினார்கள், அதன் பின்னணியில் இருந்த நிஜ மனிதர்களைக் கொண்டு புனையப்பட்ட இந்த கதை, ஒவ்வொரு நாளும் சுவாரசியமாக நகர்கிறது. தமிழர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய இந்தத் தொடர், சிங்கப்பூரில் தமிழர்களின் இருப்பு மற்றும் தமிழ் மொழியின் நிலை பற்றி இந்த உலகுக்கு உரக்கச் சொல்லும்.