விஜய் ஆண்டனி நடிப்பில் அவரது 25வது படமாக கடந்த மாதம் வெளியான படம் ‘சக்தித் திருமகன்’. இப்படத்தை அருவி, வாழ் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் பிரபு இயக்கியிருந்தார். இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிருபலானி, செல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனியே இப்படத்தில் நடித்தது மட்டுமில்லாமல் படத்தை தயாரித்து இசையமைத்தும் இருந்தார்.
இப்படம் தமிழத் தாண்டி ‘பத்ரகாளி’ என்ற தலைப்பில் தெலுங்கிலும் வெளியாகியிருந்தது. இதுவரை பெரிதாக சொல்லப்படாத தலைமை செயலகத்தில் பணிபுரியும் புரோக்கர் வேலையை மையப்படுத்தி உருவாகியிருந்த இப்படம் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பார்த்த பலரும் சமகால அரசியலை விமர்சனம் செய்து காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் திரைக்கதை பரபரப்புடன் கூடிய த்ரில்லர் அனுபவத்தை கொடுத்ததாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
இப்படம் கடந்த 24ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான நிலையில் அதிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் சுபாஷ் சுந்தர் என்பவர் இப்படத்தின் கதை தன்னுடைய கதை என அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அந்த பதிவில், அவருடைய கதையின் சுருக்கத்தை பகிர்ந்து, அக்கதையிலும் சக்தி திருமகன் படக் கதையிலும் இருக்கும் ஒற்றுமையை சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், இந்தக் கதையை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பியதாக குறிப்பிட்ட அவர், “கதை இலாகா என்கிற பெயரில், புதியவர்களுக்கு உதவுகிறோம் என்று கதையை வாங்குகிறார்கள், அதன் பின் அது எங்கே யாருக்கு எந்த வடிவில் செல்கிறது என்பது யாருக்கு வெளிச்சம்? சும்மா விடுவதாக இல்லை, சின்ன சின்ன மாற்றங்களை செய்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்றால் எப்படி? கதையை பதிப்புரிமை செய்து வைத்துள்ளேன் , டாக்குமென்ட்ஸ் எல்லாம் என்னிடம் இருக்கிறது” என வழக்கு தொடரப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்துக்கு தற்போது இயக்குநர் அருண் பிரபு தற்போது விளக்கமளித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “மிகவும் தவறான அவதூறு. சொந்த உழைப்பில் பல வருடங்கள் உழைத்து எழுதியது. நன்றி வணக்கம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us