பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் மமிதா பைஜு நாயகியாக நடித்திருக்க சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவரது இசையில் படத்தின் முதல் பாடலாக வெளியான ‘ஊரும் ப்ளட்’ பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. மற்ற பாடல்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. இப்படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகிறது.
இந்த நிலையில் படத்தின் புரொமோஷ்னல் நிகழ்ச்சி சென்னையில் ஒரு தனியா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசுகையில், “ரொம்பவே எமோஷனலாக உள்ளது. எங்கே இருந்து ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. என்னுடைய 'கட்சி சேரா' பாடல் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கீர்த்தி என்னிடம் கதை சொன்னார். உடனே, அவருடன் வேலை பார்க்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.
என்னுடைய முதல் படமே தீபாவளிக்கு வெளியாவது ஸ்பெஷலாக உள்ளது. பிரதீப் ப்ரோ, கீர்த்தி ப்ரோ, மமிதா, என்னுடைய தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. 'ஆச கூட...' பாடலில் மமிதாவை காஸ்ட் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், டேட் பிரச்சினைகள் காரணமாக அது முடியாமல் போய்விட்டது. எனக்கு பிடித்ததை செய்ய அனுமதித்த என் பெற்றோருக்கு நன்றி. பாடல்களைப் போலவே பின்னணி இசையும் உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.