தனுஷின் 55வது படம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கவுள்ளதாகவும் தயாரிப்பாளர் அன்புச் செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. மேலும் பூஜையும் போடப்பட்டது.
பின்பு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்த நிலையில் நாயகியாக சாய் பல்லவியிடம் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. அடுத்து சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை படத்தின் அடுத்த அப்டேட் மாலை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அது சம்பந்தமான அறிவிப்பு போஸ்டரில் இசை சம்பந்தப்படுத்தி இருந்ததால் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
அதன்படி தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே இசையமைப்பாளரின் அப்டேட் தான் வெளியாகியுள்ளது. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன் மூலம் தனுஷ் படத்திற்கு முதல் முறையாக அவர் இசையமைக்கிறார். இவரது முதல் ஆல்பமான ‘கட்சி சேர’ பாடலை தனுஷ் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் படத்தை தவிர்த்து சூர்யாவின் கருப்பு, அட்லீ - அல்லு அர்ஜூன் படம், ராகவா லாரன்ஸின் பென்ஸ் உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார்.
Follow Us